தொழிலாளர் இயக்கத் தலைவர் இங் சீ மெங் (படம்) அமைச்சரவையில் இடம்பெறாதபோதிலும் ஊழியர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள அவருடன் அரசாங்கம் தொடர்ந்து அணுக்கமாகச் செயல்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) தலைமைச் செயலாளராக இருப்பது வழக்கமாக இருந்து வந்ததாக திரு லீ குறிப்பிட்டார். அந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சராக நியமிக்கப்படலாம் என்றார் அவர்.
"நீண்டகாலமாக நாம் இந்த அடிப்படையில்தான் செயல்பட்டு வந்தோம். என்டியுசியின் தலைமைச் செயலாளராக லிம் சீ ஓன் பதவி வகித்ததிலிருந்து இந்த அணுகுமுறை பின்பற்றப்பட்டது என நான் நினைக்கிறேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இம்முறை இங் சீ மெங் பொதுத் தேர்தலில் வெற்றி பெறவில்லை. இருப்பினும், அவர் என்டியுசியின் தலைமைச் செயலாளராகத் தொடர்கிறார்," என்று திரு லீ கூறினார்.
திரு லிம் சீ ஓன் 1979ஆம் ஆண்டிலிருந்து 1983ஆம் ஆண்டு வரை என்டியுசியின் தலைமைச் செயலாளராகப் பதவி வகித்தார்.
1980ஆம் ஆண்டிலிருந்து 1983ஆம் ஆண்டு வரை பிரதமர் அலுவலகத்தில் இலாகா இல்லாத அமைச்சராக அவர் பதவி வகித்தார்.
தற்போது என்டியுசியின் தலைமைச் செயலாளர் பதவியில் அமைச்சர் ஒருவர் இல்லாத நிலையில், கொவிட்-19 நெருக்கடி சமயத்தில் ஊழியர்களின் நலன் எவ்வாறு பாதிக்கப்படும் என்று நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் லீயிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த பிரதமர் லீ, "ஊழியர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளவும் தொழிற்சங்கங்
களின் கருத்துகளைப் பற்றி
அறிந்துகொள்ளவும் இங் சீ மெங்குடன் அரசாங்கம் தொடர்ந்து அணுக்கமாகச் செயல்படும்.
"அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டு செயல்பட மற்ற வழிகளும் கண்டறியப்படும்.
"நான் அவரை அடிக்கடி சந்திப்பேன். திரு ஹெங் சுவீ கியட்டும் அவர் தலைமையின்கீழ் செயல்படும் அமைச்சர்களும் திரு இங்கை அடிக்கடி சந்திப்பர் என நான்
நம்புகிறேன்," என்று தெரிவித்தார்.

