இளம் சிங்கப்பூரர்கள் முடிவு செய்யவேண்டும்

இளம் சிங்கப்பூரர்கள் முடிவு செய்யவேண்டும்

3 mins read
b3e48523-9b39-4b7d-b3e4-2108de5b1eb8
பதினேழு வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 120 இளையர்களிடம் உரையாற்றிய திரு சண்முகம், இன நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்கும் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் ஏற்கெனவே இருக்கும் பட்சத்தில் இளம் சிங்கப்பூரர்கள் முன்வந்து சமூகத்தினர் வழிநடத்தும் திட்டங்களை அமைப்பது முக்கியம் எனத் தெரிவித்தார். படம்: எஸ்டி -

இன பாகுபாடற்ற நிலையை சிங்கப்பூர் இன்னும் அடையவில்லை என்பதால் இன, சமய நல்லிணக்கத்தை உறுதி செய்ய வலுவான அரசாங்க முயற்சிகளும் கடுமையான சட்டங்களும் உள்ளன.

ஆனால் இனி வரும் காலங்களில் இன, சமய கலந்துரையாடல்களில் வரையறைகளை எங்கு அமைப்பது என்பது குறித்து இளம் சிங்கப்பூரர்கள்தான் முடிவு செய்யவேண்டும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்துள்ளார்.

'மாறிவரும் காலங்கள், உருமாறி வரும் உறவுகள்' என்ற தலைப்பில் 'ஒன்பீப்பல்.எஸ்ஜி' நேற்று ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் திரு சண்முகம் இதனைக் கூறினார்.

இனங்களுக்கு இடையேயான உறவுகளை சிங்கப்பூர் கையாளும் விதம் தொடர்பில் அதன் கட்டமைப்பு சிறப்பாக இயங்குவதாக திரு சண்முகம் குறிப்பிட்டார்.

எடுத்துக்காட்டாக, சிறுபான்மை இனத்தவரிடம் அதிக சகிப்புத்தன்மை காட்டும் 140 நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் வகிக்கிறது என்று 2016ஆம் ஆண்டு 'கேலப்' உலக கணக் கெடுப்பு கூறுகிறது. இருந்தபோதும் இனம், சமயம் தொடர்பான விவகாரங்கள் சமுதாயத்தில் தொடர்ந்து பிளவுக்கோடுகளாகவும் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியவையாகவும் இருப்பதால் அவை சார்ந்த உரையாடல்கள் கவனத்துடன் கையாளப்படவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

"உரையாடலில் ஈடுபட்டால் மட்டும் விடைகள் தானாகக் கிடைக்கப்போவதில்லை. பேசுவது அவசியமானாலும் அது பாதுகாப்பான சூழலில் இடம்பெற வேண்டும்.

"அதேநேரத்தில் இன சச்சரவு களைத் தூண்டுவோருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது," என்றார் திரு சண்முகம்.

17 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட சுமார் 120 இளையர்களிடம் உரையாற்றிய திரு சண்முகம், இன நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்கும் சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் ஏற்கெனவே இருக்கும் பட்சத்தில் இளம் சிங்கப்பூரர்கள் முன்வந்து சமூகத்தினர் வழிநடத்தும் திட்டங்களை அமைப்பது முக்கியம் எனத் தெரிவித்தார்.

இத்தகைய திட்டங்களை அரசாங்கம் மகிழ்ச்சியுடன் ஆதரிக்கும் என்றும் அவர் கூறினார். உலகம் முழுவது இன விவகாரங்கள் சிக்கலானவை என்பதைக் கருத்தில் கொண்டு இந்தப் பிரச்சினையை எப்படி கையாள்வது என்பது குறித்து அவர்களை யோசிக்கும்படி அவர் ஊக்குவித்தார்.

இனம் தொடர்பான கலந்துரையாடல்கள் பொதுவெளியில் பேசப்படுவது பணிவானதன்று எனக் கருதுவதால் அவர்கள் இவற்றில் ஈடுபட தயங்கலாம் என்று கூறிய திரு சண்முகம், இளைய சிங்கப்பூரர்களோ இதில் கூடுதல் ஆர்வம் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.

எல்லைகள் இருக்க வேண்டுமா? அப்படியானால் தகாத பேச்சுக்குரிய வரையறை என்ன? போன்ற கேள்விகளை எழுப்பிய அமைச்சர் சண்முகம், கலந்துரையாடல்களின் தன்மை எப்படி இருக்கப் போகிறது என்பதை இளையர்களே முடிவு செய்யவேண்டும் என்று கூறினார்.

சீனர் அல்லாத பிரதமருக்கு சிங்கப்பூர் தயாராக இல்லை என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் சென்ற ஆண்டு நடந்த ஒரு நிகழ்வில் கூறியது குறித்தும் அமைச்சர் சண்முகம் கருத்து தெரிவித்தார்.

மக்கள் ஒரு பிரதமரைப் பற்றி நினைக்கும்போது, அவரது தோல் நிறத்தை ஒரு பொருட்டாக கருதக்கூடாது. இதையே சிங்கப்பூருக்கான தம் எதிர்கால இலக்கு என்று திரு சண்முகம் தெரிவித்தார்.

"இதுதான் தகுதிமுறை அடிப் படையிலான ஓர் உன்னத சமுதாயம். நீங்கள் முதலில் சிங்கப்பூரர் என்பதால் உங்கள் தோல் நிறமோ கலாசாரமோ ஒரு பொருட்டாக இருக்கக்கூடாது. இந்த உன்னதத்தை நாம் அடைவோம் என நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.