அவர்தான் அடிக்க உரிமை கொடுத்தார்: பங்ளாதேஷ் ஊழியரைத் தாக்கியதாகக் கூறும் வழக்கில் முன்னாள் நடிகர் வாதம்

அவர்தான் அடிக்க உரிமை கொடுத்தார்: பங்ளாதேஷ் ஊழியரைத் தாக்கியதாகக் கூறும் வழக்கில் முன்னாள் நடிகர் வாதம்

2 mins read
9ffb0131-1ec1-42ef-b969-e5c215dd50a7
இங் அய்க் லியோங். படம்: திமத்தி டேவிட் -

இங் அய்க் லியோங், 59, என்ற ஓய்வு பெற்ற உள்ளூர் நடிகர், பங்ளாதேஷ் ஊழியர் ஒருவருக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்ததாகக் கூறும் குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார். அந்தக் குற்றச்சாட்டின் பேரிலான வழக்கு விசாரணையின்போது உயிரோவிய பாணியில் சம்பவங்கள் விவரிக்கப்பட்டன.

"பங்ளாதேஷ் ஊழியர், தன்னைத் தாக்குவதற்கான உரிமையை எனக்குக் கொடுத்து இருந்தார்," என்று இங் அய்க் லியோங் அப்போது கூறினார்.

ஹுவாங் யிலியாங் என்ற பெயருடன் பிரபலமாக இருந்த அந்த நடிகர், 2018 டிசம்பர் 11 ஆம் தேதி பிற்பகல் சுமார் 4.20 மணிக்கு சிங்கப்பூர் இஸ்லாமிக் ஹப் என்ற இடத்தில், ஜஹிதுல் என்ற பங்ளாதேஷ் ஊழியருக்கு வேண்டுமென்றே காயம் விளைவித்து இருப்பதாகக் குற்றச்சாட்டு கூறுகிறது. அந்தக் குற்றச்சாட்டின் பேரில் இன்று இங் அய்க் லியோங் விசாரணை கோரினார். பங்ளாதேஷ் ஊழியர், அந்த முன்னாள் நடிகரிடம் வேலை பார்த்துவந்தார்.

மரத்தால் ஆன கைப்பிடியுடன் இருந்த இழைப்புளியால், அந்த ஊழியரை வயிற்றில் இரண்டு முறையும் தலையில் ஒரு முறையும் இங் அடித்திருக்கிறார் என்றும் அதனால் ஊழியரின் மேல் வயிற்றில் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது என்றும் உச்சந்தலையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய ஊழியர், வெளிநாட்டு ஊழியர் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். ஆகையால் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. நடிகர் இங் தானே வாதாடினார். அரசினர் தரப்பு மூன்று சாட்சியங்களை இன்று விசாரித்தது. சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு முதலில் சென்ற இரண்டு போலிஸ் அதிகாரிகளும் விசாரிக்கப்பட்டனர். அந்த மூவரில் ஒருவரான பாதுகாப்புக் காவலராக வேலை பார்க்கும் முகம்மது அக்பர் அப்துல் கலில் என்பவர், "உனக்கு வேலை செய்ய தெரியவில்லை; நீ ஒரு முட்டாள்," என்று அந்த ஊழியரை இங் திட்டியதாக சாட்சியம் அளித்தார்.ஆனால் இதை இங் மறுத்தார்.

சாட்சியம் அளித்த இரண்டு போலிஸ் அதிகாரிகளில் சார்ஜண்ட் லிம் என்பவர் ஒருவர். அந்த ஊழியர், தன்னைத் தண்டிக்கும்படி இங்கிடம் கூறி இருந்ததாக இங் தெரிவித்தார் என்று சார்ஜண்ட் லிம் கூறினார்.

"என்னை தன் தந்தைபோல் ஊழியர் ஜஹிதுல் கருதினார். அவரை அடிக்க எனக்கு உரிமை கொடுத்து இருந்தார். நான் வேலைகளை மந்தமாகச் செய்வதால் என்னை நீங்கள் அடிக்கலாம் என்று அவர் என்னிடம் தெரிவித்து இருந்தார்," என்று இங் குறிப்பிட்டதாகவும் அந்தப் போலிஸ் அதிகாரி சாட்சியம் அளித்தார்.மோகன ராஜ் சரவணன் என்பவருடன் சென்ற ஆண்டு ஜூன் 9ஆம் தேதி கைகலந்ததன் மூலம் பொது அமைதியைக் கெடுத்ததாகக் கூறும் வேறு ஒரு குற்றச்சாட்டு இப்போதைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இங் விசாரணை கோருவதால் விசாரணை தொடரும். குற்றவாளி என்று தீர்ப்பானால் இங்கிற்குப் பிரம்படி இராது.