தினக்கூலி தொழிலாளி ஒருவர் தன்னிடம் முகக்கவசம் விற்பனைக்கு இருப்பதாகக் கூறி அப்பாவிகள் பலரை ஏறக்குறைய $200,000 ஏமாற்றிவிட்டார்.
டேரேல் சியோங் ஸி யோங், 28, என்ற அந்த சிங்கப்பூரருக்கு நேற்று மூன்றாண்டு மற்றும் இரண்டு மாதம் (38 மாதம்) சிறைத்தண்டனை கிடைத்தது. அவர், $180,000க்கும் அதிக தொகை தொடர்பான இரு ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
சட்டவிரோத காரியங்கள் மூலம் கிடைத்த நன்மைகளை அனுபவித்ததாகக் கூறும் நான்கு குற்றச்சாட்டுகளின் பேரிலும் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
தண்டனை விதிக்கப்பட்டபோது 10 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன. அந்த நபர் கேரொசல் (Carousell) என்ற இணையச் சந்தையில் lester1235 என்ற பேரில் ஒரு கணக்கை நடத்தி முகக்கவசம் இருப்பதாகக் கூறி பலரையும் ஏமாற்றிவிட்டார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
போலிசார் பிப்ரவரி 14ஆம் தேதி சியோங்கை கைது செய்தனர். அவரிடம் இருந்து $145,000க்கும் மேற்பட்ட தொகையும் இதர பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
ஏமாற்றியதாகக் கூறும் ஒவ்வொரு குற்றச்சாட்டின் பேரிலும் 10 ஆண்டு வரை சிறையும் அபராதமும் விதிக்க முடியும்.

