சமூகத் தோட்டங்களில் விளையும் பழங்களும் காய்கறிகளும் திருடப்படுவது குறித்து அவற்றைப் பயிரிடுபவர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பழங்களையும் காய்கறிகளையும் திருடுவது மட்டுமல்லாது செடிகளை வேரோடு பிடுங்கிச் செல்பவர்களும் உண்டு.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சமூகத் தோட்டங்கள் தொடங்கப்பட்டன. அப்போதிருந்து இந்தத் திருட்டுப் பிரச்சினை இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
தோட்டத்தில் வளரும் செடிகளிலிருந்து ஒருசில இலைகளைப் பறிப்பதை பயிரிடுவோர் பொறுத்துக்கொள்கின்றனர். ஆனால் பழங்களையும் காய்கறிகளையும் திருடுவது, செடிகளை வேரோடு பிடுங்கி தோட்டங்களை அழிப்பது போன்ற முகம்சுளிக்கவைக்கும் நடவடிக்கைகளை யாராலும் ஏற்க முடியாது என்று அவர்கள் கூறுகின்றனர்.
இந்தத் திருட்டுச் சம்பவங் களைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் அவற்றையும் மீறி அவை தொடர்வதாக சமூகத் தோட்டங்களைப் பராமரிப்பவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். திருட்டுச் சம்பவங்களைத் தடுக்க, அனுமதி இன்றி பழங்களையோ காய்கறிகளையோ பறிக்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு நினைவூட்டும் வகையில் அறிவிப்புப் பலகைகளைச் சமூகத் தோட்டங்களுக்கு முன் அவற்றைப் பராமரிப்பவர்கள் வைத்துள்ளனர்.
இருப்பினும், மாதத்துக்கு ஒருமுறையாவது சமூகத் தோட்டங்களில் திருட்டுச் சம்பவங்கள் நிகழ்கின்றன. சமூகத் தோட்டங்களில் திருட்டுகள் நிகழ்வது உண்மை என்று பீஷான்-அங் மோ கியோ பூங்காவில் உள்ள சமூகத் தோட்டத்தில் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைப் பயிரிடும்
இல்லத்தரசியான 52 வயது திருவாட்டி கெசேன்ட்ரா ஹோ தெரிவித்தார்.
அத்தகைய திருட்டுகளை துரதிர்ஷ்டமான நிகழ்வுகள் என அவர் வர்ணித்தார். பீஷான்-அங் மோ கியோ பூங்காவில் உள்ள சமூகத் தோட்டத்தை 50 பேர் பராமரித்து வருவதாகவும் அங்கு மாதத்துக்கு ஒருமுறையாவது திருட்டுச் சம்பவம் நிகழ்வதாகவும் திருவாட்டி ஹோ கூறினார்.
சமூகத் தோட்டத்தில் வளரும் பாண்டான் செடிகளும் பப்பாளி மரங்களும் அடிக்கடி காணாமல் போவதாக அவர் தெரித்தார். "நன்கு பழுத்த பலாப்பழங்கள், பப்பாளிப்பழங்கள், பூசணிக்காய்கள் போன்றவற்றைப் பறிக்க அவற்றைச் சிரமப்பட்டுப் பயிரிட்டுப் பராமரித்த எனது அண்டைவீட்டார் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருப்பர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. அந்தப் பழங்களை யாரோ திருடிவிடுகிறார்கள்," என்றார் திருவாட்டி ஹோ.
சமூகத் தோட்டங்களில் நிகழும் திருட்டுச் சம்பவங்கள் குறித்து போலிசிடமோ குடியிருப்பாளர் குழுவிடமோ பொதுவாகப் புகார் செய்யப்படுவதில்லை.
"திருடியது யார் என்று தெரிந்தால் அவரிடம் நாங்கள் பேசி எங்கள் நிலையை புரியவைப்போம். அவர்களைப் பற்றி போலிசிடமோ நாடாளுமன்ற உறுப்பினரிடமோ புகார் செய்ய நாங்கள் விரும்பவில்லை," என்று சமூக தோட்டங்களை அமைக்கும், தோட்டக்கலையைப் பற்றி குடி
யிருப்பாளர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் தொண்டூழியர்களில் ஒருவரான 55 வயது திரு ஃபிரேங்கி டான் தெரிவித்தார்.

