ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதிக்கான திட்டத்தை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் வெளியிட்டுள்ளார். அத்திட்டத்தைச் செயல்படுத்த அக்குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பணியாற்றுமாறு குடியிருப்பாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரின் பொறுப்பு குறித்த மேல் விவரங்களை திரு ஹெங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று முன்தினம் பதிவிட்டார்.
பிரதமர் அலுவலக, தேசிய வளர்ச்சி துணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள திரு டான் கியட் ஹாவின் பங்கு குறித்து திரு ஹெங் பதிவிட்டார். உள்கட்டமைப்பு, நீடித்த நிலைத்தன்மை தொடர்பான விவகாரங்களைக் கையாளுவதில் திரு டான் சிறந்த நிலையில் இருப்பதாக திரு ஹெங் சொன்னார்.
சிங்கப்பூரின் மேம்பாட்டில் அடுத்தகட்ட தேசிய அளவிலான முயற்சியின் ஒரு பகுதியாக ஈஸ்ட் கோஸ்ட் தொகுதிக்கான திட்டம் அமைவதை திரு டான் உறுதி செய்வார் என்று திரு ஹெங் விவரித்தார். அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக, தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக திரு டான் பொறுப்பு வகித்தார்.
திருவாட்டி ஜெசிகா டான், ஈஸ்ட் கோஸ்ட் நகர மன்றத்திற்குத் தொடர்ந்து தலைமை தாங்குவார் என்று திரு ஹெங் குறிப்பிட்டார். வர்த்தகங்களுக்கு உதவும் முயற்சிகளை திருவாட்டி டான் மேற்பார்வையிடுவார்.
ஊழியர்கள் வேலையைத் தக்கவைத்துக்கொண்டு புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள உதவுவதில் தாம் கவனம் செலுத்தப் போவதாக திரு ஹெங் கூறினார்.

