ஏட்டுக்கல்விக்கும் உண்மை உலகுக்கும் வேறுபாடு உள்ளது

ஏட்டுக்கல்விக்கும் உண்மை உலகுக்கும் வேறுபாடு உள்ளது

2 mins read
88170fa5-349f-406b-aece-442408157ee7
(இடமிருந்து) கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங், என்டியு தலைவர் பேராசிரியர் சுப்ரா சுரேஷ், என்டியு துணைத் தலைவர் பேராசிரியர் லிங் சான். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பாடப் புத்தகத்தில் கற்றுக்கொண்டதற்கும் உண்மை வாழ்க்கைச் சூழலுக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருக்கிறது என்று கூறியுள்ளார் கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங். கல்வி அமைச்சராக திங்கட்கிழமையன்று புதிதாகப் பதவியேற்ற திரு வோங்கின் முதல் அதிகாரத்துவ நிகழ்வு நேற்று நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்@என்டியு' எனும் மெய்நிகர்ப் பயிலரங்குகள் திட்டத்தை அங்கு துவக்கி வைத்துப் பேசியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

"பொருளியல் தொடர்பில் நான் பாடப் புத்தகத்தில் படித்துப் புரிந்துகொண்டதற்கும் உண்மை உலகில் அது எவ்வாறு இயங்குகிறது என்பதற்கும் பெரிய இடைவெளி இருந்ததை நான் உணர்ந்தேன்," என்று தமது வேலை தொடர்பான அனுபவத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.

திரு வோங் 1997ஆம் ஆண்டில் பொருளியல் துறை பட்டதாரியாகி, வேலையில் சேர்ந்தபோது தாம் சந்தித்த சவால்களைப் பற்றி கூறினார். அப்போது தம் வேலை தொடர்பான சில இடைவெளிகளைத் தாமே சொந்தமாகக் கண்டறிந்து தீர்த்துவைத்ததாக இவர் தெரிவித்தார்.

இந்த அனுபவமே தொடர்ந்து கற்றலில் ஈடுபடும் பயணத்தை மேற்கொள்ள அவருக்குத் தூண்டுகோலாக இருந்ததென அவர் சொன்னார். கொவிட்-19 நெருக்கடியுடன் மாற்றம் செய்துகொள்ளும் வேகமும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டினார்.

"தற்போதுள்ள வேலைகள் மாறலாம். புதிய வேலைகள் உருவாகலாம். வேதனை தரும் மாற்றங் களுக்குச் சில தொழில்துறைகள் ஆளாகலாம்," என்றார் திரு வோங்.

வேலை தேடுவோருக்கு இது ஒரு சிரமமான காலகட்டம் என்றும் குறிப்பாக வேலையில் சேர விரும்பும் பட்டதாரிகளுக்குச் சவாலானது என்றும் குறிப்பிட்ட அமைச்சர் வோங், உயர்கல்விக் கழகங்களில் உள்ள வேலைவாய்ப்பு மையங்கள் உதவி நல்க முன்வந்துள்ளதாக கூறினார்.

வேலையிடத்தின் புதிய தேவைகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சிங்கப்பூரர்களுக்கு உதவ 'ஸ்கில்ஸ்ஃபியூச்சர்@என்டியு' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 38 மெய்நிகர்ப் பயிலரங்குகள் இடம்பெறுகின்றன.