நீதிமன்ற அவமதிப்பு: லி ஷெங்வூவுக்கு $15,000 அபராதம், கட்டத் தவறினால் சிறை

நீதிமன்ற அவமதிப்பு: லி ஷெங்வூவுக்கு $15,000 அபராதம், கட்டத் தவறினால் சிறை

2 mins read
e4e52cb5-d634-4856-8ce9-dee9b0802405
-

பிரதமர் லீ சியன் லூங் சகோதரர் லீ சியன் யாங்கின் மூத்த மகன் லி ஷெங்வூ (படம்), நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக நேற்று உயர் நீதிமன்றம் கூறி, திரு லிக்கு $15,000 அபராதம் விதித்தது.

அபராதத்தை இரு வாரங்களுக்குள் கட்டாவிட்டால், ஒரு வாரச் சிறைத் தண்டனையை நிறைவேற்ற வேண்டியிருக்கும் என்றும் தீர்ப்பளித்தது.

மேலும் சட்டச் செலவுகளுக்காக $8,500 மற்றும் அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவகத்திற்குரிய கட்டணமாக $8,070.69 ஆகியவற்றையும் கட்ட வேண்டும் என்று அவருக்கு உத்தரவு இடப்பட்டது.

முன்னரே வழக்கு தொடர்பான நடைமுறைகளில் இனி பங்கேற்கப் போவதில்லை என்று ஜனவரி மாதத்தில் திரு லி அறிவித்திருந்தார். இதையடுத்து நேற்று அவர் நீதிமன்றத்திற்கு வரவில்லை.

இருப்பினும் அதன் பின்னர் தம் ஃபேஸ்புக் பக்கத்தில் இத்தீர்ப்புக்கு மறுப்பு தெரிவிப்பதாக அவர் பதிவிட்டிருந்தார். தனிப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவில் தாம் 2017ஆம் ஆண்டில் குறிப்பிட்ட மூன்று சொற்களுக்காக "அரசாங்க ஊழியர்களின் மூன்றாண்டு காலம்" இத்தீர்ப்புக்காக வீணடிக்கப்பட்டுள்ளதாக அவர் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

தம் ஃபேஸ்புக் நண்பர்கள் மட்டுமே காணக்கூடியது அப்பதிவு என்று திரு லி கூறியதை ஏற்றுக்கொள்ளவில்லை நீதிபதி கண்ணன் ரமேஷ். அப்பதிவு நண்பர்கள் அல்லாதோரைச் சென்றடையலாம் என்றும் பதிவால் நீதி பரிபாலனத்தில் பொதுமக்கள் நம்பிக்கை இழக்கக்கூடும் என்றும் அவர் கூறினார். தற்போது அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக இருக்கிறார் 35 வயது திரு லி.

இவர் 2017ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதியன்று ஒரு ஃபேஸ்புக் பதிவில் சிங்கப்பூர் அரசாங்கத்தை வழக்காடுவதில் முனைந்து நிற்கிறது என்று கூறியதுடன் நீதிமன்றங்களையும் அவமதித்தார்.

அந்தப் பதிவை அகற்றுமாறு 2017ல் ஜூலை 21ஆம் தேதியன்று அரசாங்கத் தலைமைச் சட்ட அலுவலகம் திரு லிக்கு உத்தரவிட்டது. அத்துடன் மன்னிப்பும் கோரவேண்டும் என்று குறிப்பிட்டது.

ஆனால் திரு லி தம் பதிவை மாற்றினாரே தவிர அதை அகற்றவோ மன்னிப்புக் கோரவோ இல்லை.

அதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அவர் மீது தொடுக்கப்பட்டது.