குப்பைத்தொட்டியில் குழந்தை: இந்தோனீசிய மாது கைது

1 mins read
6b69cfae-5e6c-415e-94df-28aaa434561c
-

மறுபயனீடு செய்யும் பொருட்களைப் போடும் குப்பைத்தொட்டியில் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று உயிருடன் கண்டெடுக்கப்பட்டது. இதன் தொடர்பில் நேற்று குழந்தையின் தாயார் என்று நம்பப்படும் 29 வயது இந்தோனீசிய மாது கைது செய்யப்பட்டார்.

அப்பர் பாய லேபார் ரோட்டுக்கு அருகிலுள்ள தை கெங் கார்டன்ஸ் தனியார் குடியிருப்புப் பகுதியின் குப்பைத்தொட்டி ஒன்றில் திங்கட்கிழமை இரவு புதிதாகப் பிறந்த அந்தக் குழந்தை கிடந்தது.

குழந்தை கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

குழந்தையின் உடலில் காயம் ஏதும் இல்லை என்றும் அதன் உடல்நலம் சீராக உள்ளது என்றும் போலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். பெண்ணின் அடையாளத்தைக் கண்டுபிடிக்க அங் மோ கியோ போலிஸ் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையும் பகுதிவாசிகளது கண்காணிப்புக் கேமரா பதிவுகளும் உதவியதாக நேற்று போலிசார் தங்கள் அறிக்கையில் தெரிவித்தனர். 12 வயதுக்குக் கீழ் உள்ள பிள்ளையைக் கைவிட்டதன் தொடர்பில் இன்று மாது மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.

குழந்தையை முதலில் பார்த்தவர் 65 வயது திரு லியூ. குப்பைத் தொட்டியில் துண்டால் சுற்றப்பட்டு, காகிதப் பைகளுக்குள் பச்சிளம் குழந்தை இருப்பதைக் கண்டார். அவரது குடும்பம் போலிசுக்குத் தகவல் அளித்தது.