எஸ்ஐஏ ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படுகிறது

2 mins read
7a6ce3b9-224a-4daf-af33-fb6ccacc7923
தரைத்தள ஊழியர்களுக்கும் விமானிகளுக்கும் முன்கூட்டியே பணியிலிருந்து ஓய்வுபெறும் திட்டத்தை எஸ்ஐஏ வழங்கவுள்ளது. நிறுவனத்தில் குறைந்தது 15 ஆண்டுகால சேவை வழங்கிய 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடையவர்களுக்கு இத்திட்டம் வழங்கப்படும். படம்: இபிஏ -

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (எஸ்ஐஏ), செலவினத்தைக் குறைக்க மேலும் பல சிக்கன நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவுள்ளது. நிர்வாகப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு பெரிய அளவிலான சம்பள வெட்டு, மற்ற ஊழியர்களுக்கு 10 விழுக்காடு சம்பளக் குறைப்பு, விமானிகளுக்கு முன்கூட்டியே ஓய்வுக்காலம் அறிவிப்பது போன்றவை அந்த நடவடிக்கைகளில் அடங்கும்.

நாளை முதல் ஊழியர்களது சம்பளத்தின் மாதாந்திர மாறுவிகித அம்சத்தின் முழு அளவும் (10%) குறைக்கப்படும் என்று எஸ்ஐஏ அறிவித்தது. இவ்வாண்டு முதலாம் காலாண்டில் எஸ்ஐஏ, சில்க்ஏர் நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளில் இழப்பைச் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த சிக்கன நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலாளர்கள், மூத்த மேலாளர்களின் சம்பளம் 12 விழுக்காடு குறைக்கப்படும். எஸ்ஐஏ நிறுவனத்தின் துணைத் தலைவர்கள் போன்றோரின் சம்பளம் 15 விழுக்காடு குறைக்கப்படும்.

மூத்த துணைத் தலைவர்களது சம்பளம் 25 விழுக்காடும் நிர்வாகத் துணைத் தலைவர்களின் சம்பளம் 30 விழுக்காடும் குறைக்கப்படும்.

அனைத்துலக விமானப் பயணங்களின் மீட்சி எதிர்பார்க்கப்பட்ட அளவைவிட குறைவாக இருப்பதை அடுத்து, செலவு சிக்கன நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக எஸ்ஐஏ தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் போங் தெரிவித்தார். அவரது சம்பளம் 35 விழுக்காடு குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"உலகளவில் கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சில நாடுகளில் இரண்டாவது அல்லது மூன்றாவது கிருமித்தொற்று அலை எழுந்துள்ளது. நோய்த் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை நாட்டு எல்லைகள் மெதுமெதுவாகத்தான் திறக்கப்படும்," என்று திரு கோ சொன்னார்.

தரைத்தள ஊழியர்களுக்கும் விமானிகளுக்கும் முன்கூட்டியே பணியிலிருந்து ஓய்வுபெறும் திட்டத்தை எஸ்ஐஏ வழங்கவுள்ளது. நிறுவனத்தில் குறைந்தது 15 ஆண்டுகால சேவை வழங்கிய 50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடையவர்களுக்கு இத்திட்டம் வழங்கப்படும்.

சந்தை நிலவரம் மந்தமாக இருக்கும் நிலையில், மேலும் அதிகமான சிக்கன நடைமுறைகளை எதிர்பார்க்குமாறு நிறுவன ஊழியர்களிடம் திரு கோ கூறினார்.

"இது குறித்து நாங்கள் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அடுத்தகட்ட நடைமுறைகள் உறுதியானவுடன் அவற்றை அறிவிப்போம்.

"தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து மீண்டுவர எங்களால் ஆன அனைத்தையும் நாங்கள் செய்வோம்," என்றார் அவர்.