புதிய சமூக பராமரிப்பு கல்வி உபகாரச் சம்பளம்

புதிய சமூக பராமரிப்பு கல்வி உபகாரச் சம்பளம்

2 mins read
a181726b-5b1e-4daa-b6c8-30b7f5c178bf
இயன்மருத்துவம், தற்சார்பு செயல்முறை சிகிச்சை, பேச்சு சிகிச்சை, சமூகப் பணி போன்றவற்றில் வாழ்க்கைத்தொழில் நாடுவோருக்காக புதிய கல்வி உபகாரச் சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மெரிடியன் தொடக்கக் கல்லூரி மாணவி கோடி சியூ, தமது 85 வயது பாட்டியின் நிலைமைதான் தம்மை தற்சார்பு சிகிச்சை (occupational therapy) தொடர்பில் படிக்க ஆர்வத்தை ஏற்படுத்தியதாகக் கூறுகிறார்.

உணவங்காடிக் கடை வைத்து இருந்த அந்த மூதாட்டிக்கு ஏழாண்டுகளுக்குமுன் முழங்கால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு, பிடித்தமான சமையல் செய்தலை அவரால் மேற்கொள்ள முடியவில்லை, நடக்கவும் இயலவில்லை.

"வயது ஆக ஆக தாங்கள் செய்து வந்த சுயசார்பு செயல்பாடுகளைத் தங்களால் செய்ய முடியாதபோது என் பாட்டி போன்ற முதியவர்கள் மிகுந்த வேதனை அடைகின்றனர்.

"இப்படிப்பட்ட சமயத்தில் என் பாட்டி போன்ற முதிய நோயாளிகளுக்கு சுயசார்பு செயல்பாடு தொடர்பில் தகுந்த சிகிச்சை அளித்து அவர்கள் உடை மாற்றிக்கொள்ளுதல், குளித்தல், கழுவுதல் போன்ற அன்றாட நடவடிக்கைகளை செய்ய வழி வகுத்தால் அது அவர்கள் தாங்கள் இழந்த சுதந்திரத்தை மீண்டும் பெற்றது போலிருக்கும் என்றார் அந்த 22 வயது மாணவி.

குமாரி சியூ உட்பட 11 பேர் சுகாதார அமைச்சு நேற்று முன்தினம் வழங்கிய சமூக பராமரிப்பு தொடர்பான கல்வி உபகாரச் சம்பளங்களைப் பெற்றுக்கொண்டனர். சுகாதாரப் பராமரிப்பு உபகாரச் சம்பளங்கள் தொடர்பில் சமூக பராமரிப்பு உபகாரச் சம்பளம், சுகாதாரப் பராமரிப்பு நிர்வாக உபகாரச் சம்பளம், ஒருங்கிணைந்த தாதிமை உபகாரச் சம்பளம் ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.

இயன்மருத்துவம் (physio therapy), தற்சார்பு செயல்முறை சிகிச்சை, பேச்சு சிகிச்சை (speech therapy), சமூகப் பணி போன்றவற்றில் வாழ்க்கைத்தொழில் நாடுவோருக்காக புதிய சமூக பராமரிப்பு கல்வி உபகாரச் சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கல்விக் கட்டணம், மாதாந்திர ஊக்கத்தொகை போன்றவை உள்ளடக்கும்.

சுகாதாரப் பராமரிப்புத் துறையில் மருத்துவர்கள், தாதியர், துணை சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள், நிர்வாகப் பணியாளர்கள் போன்றவற்றில் வாழ்க்கைத்தொழில் நாடும் 120 உபகாரச் சம்பளம் பெற்ற வர்களில் மேற்கூறப்பட்ட 11 பேரும் அடங்குவர்.

இதன் தொடர்பில் நடைபெற்ற மெய்நிகர் நிகழ்ச்சியில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங்கும் சுகாதார அமைச்சின் நிரந்தரச் செயலாளர் திரு சான் யெங் கிட்டும் பங்கேற்றனர்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினரான திரு சான் பேசுகையில், "சமூக பராமரிப்பு சேவைகளை வழங்கும் துணை சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள் பங்களிப்பின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் சமூக பராமரிப்பு உபகாரச் சம்பளம் அமைந்துள்ளது," என்றார்.

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் நான்கில் ஒரு சிங்கப்பூரர் 65 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.