செங்காங் உட்பட 17 நகர மன்றங்கள் அமைக்கப்பட்டன

செங்காங் உட்பட 17 நகர மன்றங்கள் அமைக்கப்பட்டன

2 mins read
3fe43997-bb5f-4302-9d07-8df29a3d634a
படம்: எஸ்டி, ஓங் வீ ஜின் -

புதிய செங்காங் நகர மன்றம் உட்பட, வட்டார எல்லை மாற்றங்களுடன் 11 நகர மன்றங்கள், இவற்றுடன் நகர மையப் பகுதிகளில் மாற்றங்களுடன் 5 நகர மன்றங்கள் என மொத்தம் 17 நகர மன்றங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய வளர்ச்சி அமைச்சு நேற்று வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அண்மைய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று நகர மன்றங்கள் சட்டத்தின்கீழ் இதற்கான உத்தரவை அமைச்சு நேற்று பிறப்பித்தது.

"குடியிருப்பாளர்களின் தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்யும் விதமாக, நகர மன்றங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பணியாற்றி சுமுகமான முறையில் மாறுதலுக்கு வழிவகுப்பதை தான் ஊக்குவிப்பதாக," தேசிய வளர்ச்சி அமைச்சு தனது அறிக்கையில் கூறியது.

செங்காங் குழுத் தொகுதி உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து செங்காங் நகர மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய குழுத் தொகுதி பொதுத் தேர்தலுக்கு முந்திய பாசிர் ரிஸ்-பொங்கோல் குழுத் தொகுதியின் சில பகுதிகள், பொங்கோல் ஈஸ்ட் தனித் தொகுதி, செங்காங் வெஸ்ட் தனித் தொகுதி ஆகியவற்றை உள்ளடக்கியது.

இேதபோல், அங் மோ கியோ, பீஷான்-தோ பாயோ, சுவா சூ காங், ஜாலான் புசார், மரின் பரேட், மார்சிலிங்-இயூ டீ, நீ சூன், பாசிர் ரிஸ்-பொங்கோல், செம்பவாங், தெம்பனிஸ், வெஸ்ட் கோஸ்ட் ஆகிய நகர மன்றங்கள் தொகுதி எல்லை மாற்றங்களை உள்ளடக்கி மாற்றியமைக்கப்பட்டுள்ள 11 நகர மன்றங்கள் ஆகும்.

எவ்வித தொகுதி எல்லை மாறுதலுமின்றி தொடரும் 5 நகர மன்றங்களாக அல்ஜுனிட்-ஹவ்காங், ஈஸ்ட் கோஸ்ட்-ஃபெங்ஷான், ஹாலந்து-புக்கிட் பாஞ்சாங், ஜூரோங்-கிளமெண்டி, தஞ்சோங் பகார் நகர மன்றங்கள் விளங்கும்.

இதில் ஈஸ்ட் கோஸ்ட்-ஃபெங்ஷான் நகர மன்றம் ஈஸ்ட் கோஸ்ட் நகர மன்றம் எனப் பெயர் மாற்றம் காண்கிறது.

நகர மன்றங்கள் சட்டத்தின்கீழ், உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் நகர மன்றங்கள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள பகுதிகளின் நிர்வாகத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதன்படி, செங்காங் நகர மன்றமும் மாற்றியமைக்கப்பட்ட 11 நகர மன்றங்களும் அக்டோபர் மாதம் 28ஆம் தேதியிலிருந்து தங்கள் பகுதிகளின் நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

எனினும், நகர மன்றங்கள் தங்களுக்குள் இதற்கு முந்திய வேறோர் தேதியில் நகர மன்றப் பகுதிகளின் நிர்வாகத்தை மேற்கொள்ளலாம் என்றும் அமைச்சின் அறிக்கை விளக்கமளித்துள்ளது.