பல்வேறு விதமான 112 மோசடிச் சம்பவங்கள் தொடர்பில் 85 பேரிடம் போலிசார் புலன்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோசடிச் செயல்களில் சிக்கியோர் $716,000 தொகையை இழந்துள்ளனர். மோசடியில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் போலிஸ்வசம் சிக்கியவர்களில் ஆக இளையவர் 19 வயது ஆடவர். மொத்தமாக பிடிபட்டுள்ள 85 பேரில் 71 வயதானவரும் அடங்குவர். கடந்த திங்கட்கிழமை (ஜூலை 27) முதல் புதன்கிழமை வரை மூன்று நாட்கள் போலிசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சிக்கிய இந்தக் கும்பலில் 29 பெண்களும் உள்ளனர்.
மோசடி, கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றுதல் உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் பணத்துக்காக மற்றவர்களின் மோசடிச் செயலுக்குத் துணைபோனதாகத் தெரிய வந்துள்ளது. சட்டவிரோத பணத்தை குற்றக் கும்பல்கள் சார்பாக மற்றவர்களுக்கு மாற்றிவிடுவது அல்லது சட்டவிரோதப் பணத்தைப் பெறுவது ஆகியவற்றில் இவர்களுக்குத் தொடர்பு இருப்பதாக போலிசார் சந்தேகிக்கின்றனர். இவற்றை விளக்கி போலிசார் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
பொதுமக்களை மோசடிச் சம்பவங்களின்பால் ஈர்ப்பதற்கு சுற்றுலாத்தலங்களுக்கான நுழைவுச்சீட்டுகள், கைபேசிகள் மற்றும் ஹோட்டடல் அறை முன்பதிவுகள் ஆகியவற்றை மோசடிப் பேர்வழிகளில் சிலர் பயன்படுத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அக்குற்றம் புரிந்தோருக்கு பத்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம். அதேபோல கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றும் குற்றம் புரிவோருக்கு பத்தாண்டு வரையிலான சிறைத் தண்டனையோடு $500,000 வரையிலான அபராதமும் விதிக்கப்படலாம்.
மோசடிச் சம்பவங்களில் சிக்காமல் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு போலிசார் கேட்டுக்கொண்டு உள்ளனர். தங்களது வங்கிக் கணக்கையும் கைபேசித் தொடர்பையும் மற்றவர்களின் பயன்பாட்டுக்குத் தருவதன் மூலம் அவர்களின் குற்றச்செயல்களுக்குப் பொதுமக்கள் பொறுப்பாகி வேண்டி வரும் என்றும் போலிசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மோசடி தொடர்பான ஆலோசனைகளுக்கு 1800-722-6688 என்னும் மோசடித் தடுப்பு உதவி எண்ணை அழைக்கலாம். அல்லது https://www.scamalert.sg என்னும் இணையத்தளத்தை நாடலாம். மோசடி தொடர்பான தகவல்களை 1800-255-0000 என்னும் எண்ணில் போலிசை அழைக்கலாம்.

