வீடு புதுப்பிப்பு: 20% வரை கூடுதல் செலவாகலாம்

போதிய ஊழியர்கள் கிடைக்காமல் உட்புற வடிவமைப்பு நிறுவனங்கள் திண்டாடி வருவதால் தங்களது வீடுகளைப் புதுப்பிக்க உரிமையாளர்கள் கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கலாம்.

கொவிட்-19 நோய்ப் பரவலுக்கு முன்பிருந்ததை ஒப்புநோக்க, அண்மைய வாரங்களாக வீடு புதுப்பிப்புச் செலவுகள் 10% முதல் 20% வரை உயர்ந்துவிட்டன என்று ஒப்பந்ததாரர்களும் உட்புற வடிவமைப்பு நிறுவனங்களும் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி தெரிவிக்கிறது.

கடந்த ஜூன் 13ஆம் தேதி நிலவரப்படி, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 19,000க்கும் மேற்பட்ட வீடு புதுப்பிப்புத் திட்டங்களில் மீண்டும் பணிகளைத் தொடங்க கட்டட, கட்டுமான ஆணையம் அனுமதி வழங்கிவிட்டது.

கூடுதல் செலவுகளைத் தாங்களே ஏற்க வேண்டும் அல்லது வாடிக்கையாளர்களை ஏற்கும்படி செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் புதுப்பிப்புப் பணி ஒப்பந்ததாரர்கள், பொருட்கள் விநியோகிப்போர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஸ்கை டான் கூறினார்.

அப்படிச் செய்யுமுன், பொருட்கள் விற்பனையாளர்கள், விநியோகிப்பாளர்களிடம் முடிந்த அளவிற்கு விலையைக் குறைக்கச் சொல்லி பெரும்பாலான நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தும் என்று டாக்டர் டான் சொன்னார்.

தச்சர்கள், குழாய் வேலை செய்வோர், மின்வேலை செய்வோர் என வீடு புதுப்பிப்புப் பணிகளுக்கு நிறுவனங்கள் பெரும்பாலும் மலேசிய ஊழியர்களையே நம்பியிருக்கின்றன.

அதாவது, வீடு புதுப்பிப்புப் பணிகளைச் செய்யும் ஊழியர்களில் ஏறக்குறைய 80 விழுக்காட்டினர் மலேசியர்கள்தான் என்று டாக்டர் டான் குறிப்பிட்டார்.

ஆயினும், சிங்கப்பூர்-மலேசியா இடையே விரைவில் போக்குவரத்து தொடங்கிவிடும் என்ற நம்பிக்கையுடன் உட்புற வடிவமைப்பு நிறுவனங்கள் காத்திருக்கின்றன. அதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 10ஆம் தேதி முதல் பெறப்படவுள்ளன.

இந்த இடைக்கால பயண ஏற்பாட்டின் மூலம் நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்போரும் அத்தியாவசிய பணிகள் அல்லது அதிகாரபூர்வ தொழில் சார்ந்த பணியாளர்கள் பயனடைவர் எனக் கூறப்படுகிறது.

வீடு புதுப்பிப்புப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெறுவதை உறுதிசெய்ய, சில நிறுவனங்கள் உள்ளூர் ஊழியர்களைப் பணியில் அமர்த்தியுள்ளன. அவர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்க வேண்டி இருக்கிறது அல்லது குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது.

தமது வீட்டின் புதுப்பிப்புப் பணிகளுக்காக கூடுதலாக இரண்டு, மூன்று ஆயிரம் வெள்ளி தர வேண்டியிருக்கலாம் என எதிர்பார்க்கிறார் திரு அப்துல் ஹாடி, 31.

செங்காங்கில் உள்ள தமது புதிய நான்கறை ‘பிடிஓ’ வீட்டின் புதுப்பிப்புப் பணிகளுக்காக ‘ரெனொடிக்‌ஷன்’ எனும் நிறுவனத்தை நாடினார் திரு ஹாடி நாடினார்.

கடந்த மே மாதத்துடன் புதுப்பிப்புப் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் அது மூன்று மாத காலம், அதாவது இம்மாத இறுதி வரைக்கும் தள்ளிப்போடப்பட்டது.

இந்நிலையில், தமது ஊழியர்களில் கிட்டத்தட்ட 70 விழுக்காட்டினர் பணிக்குத் திரும்பிவிட்டதாகச் சொன்னார் ‘ரெனொடிக்‌ஷன்’ நிறுவனர் திரு அஸ்ரி அப்பாஸ், 43.

அவர் வேலைக்கு வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் கொவிட்-19 நோய்த்தொற்று இல்லை எனச் சான்றிதழ் பெற்றுவிட்டதாகவும் அவர்கள் தங்களது விடுதிகளைவிட்டு வெளியே சென்று வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் திரு அப்பாஸ் கூறினார். அவரிடம் வேலை செய்யும் இதர 30% ஊழியர்கள் மலேசியர்கள்.

தமது நிறுவனம் இப்போது எட்டு வீடுகளில் புதுப்பிப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அவையனைத்தும் பாதிக்கப்பட்டு இருப்பதாக திரு அப்பாஸ் குறிப்பிட்டார்.

செலவும் சற்று அதிகரித்திருப்பதாகக் கூறிய அவர், “கூடுதலாகப் பணம் செலுத்த விரும்பவில்லை எனில் பணிகளை முடிக்கச் சற்று கால தாமதமாகலாம் என்று வீட்டு உரிமையாளர்களிடம் கூறிவிட்டேன்.

“மலேசிய ஊழியர்கள் சிங்கப்பூர் வந்து செல்ல அனுமதி கிடைத்ததும் அவர்களைக் கொண்டு அவ்வீடுகளில் பணியைத் தொடங்குவேன். மாறாக, விரைவில் பணியை முடிக்குமாறு வீட்டுரிமையாளர்கள் கேட்டுக்கொண்டால் உள்ளூர் ஊழியர்களைப் பணியில் அமர்த்த வேண்டி இருக்கும். அதனால் செலவும் கூடும்,” என்றார் திரு அப்பாஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!