தீப்பற்றி எரிந்த மின்கலங்கள்: சட்டவிரோத மின்சைக்கிள் தொடர்பில் மூவருக்கு அபராதம்

சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மின்சார சைக்கிளைப் பயன்படுத்திய மூவர் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். வெவ்வேறு சம்பவங்களில் மின்சார சைக்கிள்களின் மின்கலம் தீப்பற்றி எரிந்ததன் தொடர்பில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. தீச்சம்பவங்களில் யாருக்கும் காயமில்லை.

ஐசக் சூ சி கின், 24, லோ யி ஹாங், 31, லீ கீ கியன், 42, ஆகிய மூன்று சிங்கப்பூரர்களுக்கும் $3,000 முதல் $3,500 வரையிலான அபராதம் விதிக்கப்பட்டது. மின்சார சைக்கிள்களாக சட்டவிரோதமாக மாற்றி அமைக்க சம்மதித்தது, பதிவு செய்யப்படாத மின்சார சைக்கிள்களை வைத்திருந்தது ஆகிய குற்றங்களை லீயும் லோவும் ஒப்புக்கொண்டனர்.

சட்டவிரோதமாக மாற்றி அமைக் கப்பட்ட மின்சார சைக்கிளை மற்றவர் பயன்படுத்த அனுமதித்தது, பதிவு செய்யப்படாத மின்சார சைக்கிள்களை வைத்திருந்தது ஆகிய குற்றங்களை சூ ஒப்புக்கொண்டார். இவருக்கு ஆக அதிகமாக $3,500 அபராதம் விதிக்கப்பட்டது. கொவிட்-19 கிருமிப் பரவல் தொடங்கியது முதல் வேலையின்றி இருப்பதாக இவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜனவரி 3ஆம் தேதி சட்டவிரோத மின் சைக்கிளை தமது நண்பர் பயன்படுத்த இவர் அனுமதித்ததாகக் குற்றச்சாட்டில் கூறப்பட்டு உள்ளது.

சுவா சூ காங் அவென்யூ 3ல் உள்ள ஒரு புளோக்கின் படிக்கட்டு தளத்தில் தமது மின்சார சைக்கிளை மின்னேற்றுவதற்காக சூ விட்டுச் சென்றார்.

அந்த சைக்கிளின் மின்கலம் தானாக தீப்பற்றி எரிந்ததாக சூவிடம் அவரது தந்தை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சூவும் பொதுமக்களில் சிலரும் தீயை அணைத்துவிட்டனர். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் வருவதற்குள் தீ அணைக்கப்பட்டுவிட்டது.

$3,300 அபராதம் விதிக்கப்பட்ட லீ, கடந்த ஜனவரி 3ஆம் தேதி சுவா சூ காங் எம்ஆர்டி நிலையத்திற்கு அருகே நிறுத்தி வைத்திருந்த மின்சார சைக்கிளின் மின்கலம் தானாக தீப்பற்றி எரிந்தது.

கடந்த ஆண்டு டிசம்பரில் அந்த சைக்கிளின் வெளியே சட்டவிேராதமாக மின்கலத்தைப் பொருத்தியதாகவும் அதற்கு அவர் $350 செலவழித்ததாகவும் கூறப்பட்டது.

$3,000 அபராதம் விதிக்கப்பட்ட லோ, தாமான் ஜூரோங்கின் தா சிங் ரோட்டிலுள்ள தமது வீட்டின் புளோக் அருகே நிறுத்தி வைத்திருந்த மின் சைக்கிளின் மின்கலத்தில் பொறி கிளம்பி தீப்பற்றியது.

மின்சார சைக்கிள்கள் தொடர்பில் கடந்த 2018ஆம் ஆண்டு புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நிலப் போக்குவரத்து ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட, EN15194 சான்றிதழ் அளிக்கப்பட்ட மின்சார சைக்கிள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.