சகோதரர் வழக்கு: சகோதரிகளுக்கு ஆதரவாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2 mins read
fc64362b-4949-4def-abd7-079488cb8c00
-

தமது சொந்த செலவுக்காக குடும்பத் தொழிலுக்கான நிதியைத் தங்களது சகோதரர் பயன்படுத்தியதைக் கவனித்த இரு சகோதரிகள், அதை கண்டுகொள்ளாமல் இருந்தனர்.

எனினும், வங்கி ஒன்றுக்குச் செலுத்தப்படாத கடன் தொடர்பில், சகோதரரின் மகன் தங்களுக்கு எதிராகவும் மறைந்த தாயாரின் சொத்துக்கு எதிராகவும் வழக்குத் தொடர முடிவெடுத்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தைச் சகோதரிகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தனர்.

இறுதியாக, உயர் நீதிமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

திரு லீ கிம் எங் என்பவர், லீ ஹுவாட் கம்பெனி என்ற நிறுவனத்தை 1958ல் தொடங்கினார். அப்பர் புக்கிட் தீமா ரோட்டில், மோட்டார்சைக்கிள் உதிரி பாகங்களை விற்பனை செய்யும் அந்த நிறுவனம் பட்டறையாகவும் செயல்பட்டது.

திரு லீயின் புதல்வரான லீ கெர் மின் என்பவர் நிறுவனத்தில் ஒரு பங்காளியாக 1975ல் சேர்க்கப்பட்டார். தந்தையின் மறைவுக்குப் பிறகு புதல்வர் திரு லீயின் தாயாரான திருவாட்டி இங் ஆங் சும் என்பவரும் நிறுவனத்தின் ஒரு பங்காளியானார்.

2014 ஜூலையில் லீ கெர் மின் உடல்நிலை சரியில்லாமல் போனதை அடுத்து அவருடைய இரண்டாவது புதல்வரான ஜாஃப்ரி லீ காய் லியோங் என்பவர் நிறுவனத்தை நிர்வகித்தார்.

திருவாட்டி இங் 2014ல் மரணம் அடைந்தார். அவரின் புதல்விகளான திருவாட்டி லீ கின் ஹோங், திருவாட்டி லீ கிம் மோய் இருவரும் குடும்பச் சொத்துகளுக்கு நிர்வாகிகளானார்கள்.

நிறுவனம் சார்பில் 2000ல் யுனைடெட் ஓவர்சிஸ் வங்கியில் வாங்கிய கடனை யார் அடைப்பது என்பதன் தொடர்பில் சகோதரிகளுக்கும் சகோதரரின் குடும்பத்துக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது.

திரு லீ தன்னுடைய மூத்த மகன் ரோனல்ட் லீ என்பவரின் மூலமாக தன் சகோதரிகளை எதிர்த்து வழக்குத் தொடுத்தார்.

திருவாட்டி இங் மரணம் அடைந்தபோது வங்கிக்கு $740,214 கடனை அடைக்க வேண்டி இருந்தது. அதில் பாதியை சகோதரிகள் செலுத்த வேண்டும் என்று திரு லீ கோரினார்.

அதேவேளையில், தங்கள் தாயாரான திருவாட்டி இங் படிக்காதவர் என்பதால் தொழிலில் இருந்து லாபம் எதுவுமே அவருக்குக் கிடைக்கவில்லை என்றும் தொழிலை நிர்வகித்து நடத்தியதில் தாயாருக்குப் பங்கு இல்லை என்றும் சகோதரிகள் வாதிட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சகோதரிகளுக்கு ஆதரவாக ஜூலை 30ஆம் தேதி தீர்ப்பளித்தது.

தொழில் மூலம் திரு லீ எடுத்துக்கொண்ட பணம் எவ்வளவு என்பதைக் கண்டுபிடிக்கவும் அதை மீட்கவும் விசாரணை தேவை என்று அந்தச் சகோதரிகள் விரும்பினால் அவர்கள் அதற்கு மனுச் செய்யலாம் என்றும் நீதிபதி தெரிவித்து இருக்கிறார்.