புக்கிட் பாஞ்சாங் பேருந்துச் சேவைகளில் மாற்றம்; மறுபரிசீலனை செய்ய எம்.பி.க்கள் கோரிக்கை

குடியிருப்பாளர்கள் அதிருப்தி

தங்களது வட்டாரத்தை நகரத்துடன் இணைக்கும் இரு பேருந்துச் சேவைகள் உட்பட முக்கிய பேருந்துச் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட இருப்பதற்கு புக்கிட் பாஞ்சாங் குடியிருப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இம்மாதம் 16ஆம் தேதியில் இருந்து புக்கிட் பாஞ்சாங்கை ஆர்ச்சர்ட், பிராஸ் பாசா, ஷென்டன் வே போன்ற பகுதிகளுடன் இணைக்கும் 700, 700ஏ ஆகிய பேருந்துச் சேவைகள் நிறுத்தப்படவுள்ளன. அதேபோல, ஈசூனில் இருந்து புக்கிட் பாஞ்சாங் வழியாக மரினா பே வட்டாரத்தை இணைக்கும் பேருந்துச் சேவை 171ன் சேவை தூரம் குறைக்கப்படவுள்ளது.

புக்கிட் பாஞ்சாங்கையும் ஆர்ச்சர்ட் சாலையையும் இணைக்கும் பேருந்துச் சேவை 972, இனி நியூட்டன் எம்ஆர்டி நிலையத்திற்குச் செல்லும்படி வழி மாற்றி விடப்பட இருக்கிறது.

இந்தப் பேருந்துச் சேவை மாற்றங்கள் குறித்து எஸ்எம்ஆர்டி நிறுவனம் நேற்று முன்தினம் பிற்பகலில் அறிவித்தது. இதையடுத்து, பேருந்து வழித்தடங்களுக்கான மைய அமைப்பான நிலப் போக்குவரத்து ஆணையத்தைத் தான் தொடர்புகொண்டதாகவும் நேற்றுப் பிற்பகல் வரை பதில் கிடைக்கவில்லை என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

பேருந்துச் சேவை மாற்றங்களை நிறுத்தி வைக்கும்படி நேற்று முன்தினத்தில் இருந்து மூன்று மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. நேற்றுப் பிற்பகல் வரை ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அம்மனுக்களில் தங்களது பெயரை இணைத்துள்ளனர்.

இதனிடையே, இந்தப் பேருந்துச் சேவை மாற்றங்களைச் செயல்படுத்த நிலப் போக்குவரத்து ஆணையம் தீர்மானித்திருப்பது ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது என்றும் இந்த மாற்றங்கள் கடுமையானவை என்றும் புக்கிட் பாஞ்சாங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“குடியிருப்பாளர்கள் எளிதில் சென்று வர ஏதுவாகவும் பேருந்துச் சேவை நிறுவனங்களுக்கு உகந்ததாகவும் இருக்கும் மாற்றுத் தீர்வுகளைக் கண்டறியும்படி நிலப் போக்குவரத்து ஆணையத்தைக் கேட்டுக்கொண்டோம். துரதிர்ஷ்ட வசமாக, அங்குள்ள பேருந்துச் சேவை திட்டவியலாளர்கள் எங்களது மாற்று ஆலோசனைகளைச் செவிமடுக்கவில்லை. இந்த மாற்றங்கள் எங்கள் மக்களின் வாழ்க்கையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் கவனத்தில் கொள்ளாதது வருத்தம் அளிப்பதாக உள்ளது,” என்றார் திரு லியாங்.

பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்காகத் தம்மால் இயன்றவரை போராடப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பேருந்துச் சேவை மாற்றங்கள் தொடர்பில் குடியிருப்பாளர்களில் பலர் தம்மிடம் குறைப்பட்டுக் கொண்டதாக ஹாலந்து - புக்கிட் தீமா குழுத் தொகுதி உறுப்பினர்களில் ஒருவரான திரு எர்வர்ட் சியா தமது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“பேருந்துச் சேவை மாற்றங்கள் எங்களது குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால், ஆணையம் தனது முடிவுகளை மறுபரிசீலனை செய்து, இந்த மாற்றங்களைத் தாமதப்படுத்தி, தனது திட்டங்களை மறுஆய்வு செய்யும் என நம்புகிறேன்,” என்றார் திரு சியா.

தமது வட்டாரத்திலும் அருகில்உள்ள சுவா சூ காங்கிலும் பல காலமாக பொதுப் போக்குவரத்து வசதி மோசமாக இருந்ததாகக் குறிப்பிட்டார் புக்கிட் பாஞ்சாங்வாசியான திரு எலியட் லின், 35.

இந்நிலையில், ஆறு ஆண்டுகளுக்குமுன் பேருந்துச் சேவை மேம்பாட்டுத் திட்டம் வந்த பிறகே அந்தக் குறை தீர்ந்ததாக திரு லின் சொன்னார். அத்திட்டத்தின் மூலம் சேர்க்கப்பட்டதே பேருந்துச் சேவை 972.

“இப்போது, மீண்டும் பழைய நிலைக்கே செல்லப் போகிறோம். சில நேரங்களில் பேருந்துச் சேவைகளை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்படலாம். ஆனாலும், இந்த வட்டாரத்தில் இருந்து நகருக்குச் செல்ல இரண்டு பேருந்துச் சேவைகள் மட்டுமே உள்ளன,” என்றார் அவர்.

இந்த மாற்றங்கள் நடப்பிற்கு வந்தால் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் வேலை செய்யும் தம் மனைவி அங்கு செல்ல குறைந்தது 20 நிமிடங்கள் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பேருந்துச் சேவை மாற்றங்கள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்ற திரு லின், அவ்வட்டாரத்தில் 35,000 பேர் வசிப்பதாகவும் சுட்டினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon