நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அதிகமானோர் வந்து தொழுகை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை நான்கு பள்ளிவாசல்கள் மேற்கொண்டு வருகின்றன.
அதே வேளையில், கொவிட்-19 நோய்ப் பரவல் காரணமாக வழிபாட்டாளர்கள் பாதுகாப்பாகத் தொழுகை நடத்துவதை உறுதிசெய்ய கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அவை எடுக்க வேண்டியுள்ளது.
அஸியஃபா பள்ளிவாசல், முஜாகிதீன் பள்ளிவாசல், அல் இஸ்திக்ஃபர் பள்ளிவாசல், அல் இமான் பள்ளிவாசல் ஆகிய நான்கு பள்ளிவாசல்களும் கூடுதலாக நுழைவு, வெளியேற்ற வழிகளை அமைக்கும் அல்லது வெவ்வேறு நேரங்களில் வந்து தொழுகை நடத்த ஏற்பாடு செய்யும் என்று சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் (முயிஸ்) பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, 12 சமயத் தலங்களில் ஒரே நேரத்தில் நூறு பேர் வரை கூட்டாக வழிபட அனுமதி அளிக்கப்படும் என்று அரசாங்கம் நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்தச் சோதனை முயற்சி, கூட்டுப் பிரார்த்தனை, வழிபாட்டுச் சேவைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
அதே நேரத்தில், புதிய பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும். அதாவது, அதிகபட்சம் 50 பேர் அடங்கிய இரு பிரிவுகளாக அவர்கள் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கலாசார, சமூக, இளையர் துறை அமைச்சு அறிவுறுத்தி இருக்கிறது.
அவ்விரு பிரிவுகளும் தடுப்புகள் கொண்டு பிரிக்கப்பட்டு இருக்கலாம் அல்லது வெவ்வேறு நுழைவு, வெளியேற்ற வழிகளைக் கொண்டிருக்கலாம் அல்லது வெவ்வேறு நேரங்களில் வந்து வழிபாடு நடத்திவிட்டுச் செல்லலாம்.
அதன்படி, அமைச்சின் சோதனை முயற்சியில் இடம்பெற்றுள்ள நான்கு பள்ளிவாசல்களும் வரும் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது இரு பிரிவு முறையை நடைமுறைப்படுத்தும். அந்நான்கு பள்ளிவாசல்களிலும் மூன்று தொழுகை அமர்வுகள் இடம்பெறும் என்பதால் கூடுதலாக 600 பேர் வரை வந்து தொழுகை நடத்த முடியும்.
இது குறித்து முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாக கருத்துரைத்துள்ளார்.
அதிகமான முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை பள்ளிவாசலுக்குச் சென்று தொழுகை நடத்த முடியும் என்பதால் தாம் மகிழ்ச்சி அடைவதாக அமைச்சர் மசகோஸ் குறிப்பிட்டார்.
இருந்தபோதும், சமூகத்தில் கொரோனா பரவும் அபாயம் இன்னும் அதிக அளவிலேயே நீடிப்பதால் சமயத் தலங்களில் அதிகமானோரை அனுமதிப்பதில் இன்னும் கவனமாக இருக்க வேண்டி இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
இதனிடையே, கடந்த ஜனவரி 26 முதல் இன்னும் ஒருமுறைகூட பள்ளிவாசலுக்குச் சென்று வெள்ளிக்கிழமை தொழுகையில் பங்கேற்க முடியாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று முயிஸ் தெரிவித்து இருக்கிறது.

