சிங்கப்பூர்-மலேசியா இடையே மீண்டும் விமான சேவையைத் தொடங்க ஏர்ஏஷியா ஆயத்தம்

உலகின் பரபரப்பான சிங்கப்பூர்-கோலாலம்பூர் வழித்தடம் உட்பட, சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான விமானச் சேவைகளை மீண்டும் தொடங்க ஏர்ஏஷியா நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது.

‘ஆர்ஜிஎல்’ எனப்படும் இருதரப்பு பசுமைத் தடத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இரு நாடுகளும் தீர்மானித்துள்ளதை அடுத்து, சிங்கப்பூர்-மலேசியா இடையே விமானச் சேவைகளை மீண்டும் தொடங்க ஏர்ஏஷியா திட்டமிட்டு வருகிறது.

உரிய அதிகாரபூர்வ அமைப்புகளிடம் இருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில் மற்ற நாடுகளுக்கும் விமானச் சேவைகள் இயக்கப்படும் என்று மலிவுக் கட்டண விமானச் சேவை நிறுவனமான ஏர்ஏஷியா தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக, கோலாலம்பூர் - சிங்கப்பூர் இடையே நாள்தோறும் விமானங்கள் இயக்கப்படும். பினாங்கு, கோத்தா கினபாலு, கூச்சிங், ஈப்போ ஆகிய மலேசிய நகரங்களுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே வாரம் ஒருநாள் விமானங்கள் இயக்கப்படும்.

இம்மாதம் 17ஆம் தேதியில் இருந்து அந்த விமானச் சேவைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இருப்பினும் அது இருநாட்டு அரசாங்கங்களின் அடுத்தகட்ட அறிவிப்புகளைப் பொறுத்து அமையும் என்றும் ஏர்ஏஷியா கூறி இருக்கிறது.

அத்தியாவசியமான வர்த்தக, அதிகாரபூர்வ காரணங்களுக்காக எல்லை கடந்த பயணங்களை அனுமதிப்பது என்று சிங்கப்பூர், மலேசிய அரசாங்கங்கள் எடுத்து இருக்கும் முடிவை ஏர்ஏஷியா வரவேற்றுள்ளது.

தகுதிபெறும் பயணிகள், ‘பிசிஆர்’ எச்சில்/சளி மாதிரி பரிசோதனை செய்துகொள்வது உட்பட இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட கொவிட்-19 தடுப்பு, பொதுச் சுகாதார நடவடிக்கைகளுக்கு இணங்கி நடக்க வேண்டும்.

விமானப் போக்குவரத்தைத் தொடங்கி, இந்த வட்டாரத்தில் மீண்டும் பொருளியல் நடவடிக்கைகளுக்குப் புத்துயிர் அளிக்க ஏர்ஏஷியா முழுமையான கடப்பாடு கொண்டுள்ளது என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஃபெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

“சிங்கப்பூரும் மலேசியாவும் பொருளியலுக்குப் புத்துயிரளிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ‘ஆர்ஜிஎல்’ எனும் திட்டத்தின்மூலம் முதல்படியை எடுத்து வைத்துள்ளன. ஆனாலும், இது நிச்சயமாக மிக முக்கியமான நடவடிக்கையும்கூட,” என்று திரு ஃபெர்னாண்டஸ் குறிப்பிட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon