சுயநினைவிழந்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு சிறை, பிரம்படி

குடிபோதையில் இருந்த 24 வயது பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆடவருக்கு நேற்று தண்டனை விதிக்கப்பட்டது.

மதுபானக் கூடத்தில் தமது தோழிகளுடன் இருந்துவிட்டு குடிபோதையில் வெளியேறிய அப்பெண்ணை மூன்று ஆடவர்கள் காருக்குள் இழுத்து மானபங்கம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை அவர்கள் பாசிர் ரிஸ் வட்டாரத்தில் உள்ள உல்லாச விடுதிக்குக் கொண்டு சென்றனர். அங்கு சுயநினைவிழந்த நிலையில் இருந்த அப்பெண்ணை அந்த மூன்று ஆடவர்களில் இருவர் பாலியல் வன்கொடுமை செய்தனர். இதை மூன்றாவது ஆடவர் தமது கைபேசி மூலம் காணொளி எடுத்தார்.

அப்பெண்ணைப் பாலியல் ரீதியாக தாக்கிய ஆடவர்களில் ஒருவரான 28 டே பூன் ஹுவாட்டுக்கு பத்து ஆண்டு மூன்று மாத சிறைத் தண்டனையும் ஐந்து பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.

2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி அதிகாலை அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அதுமட்டுமல்லாது வேறொரு சம்பவத்தில் கலகம் விளைவித்ததையும் அவர் ஒப்புக்கொண்டார்.

டே, பாசிர் ரிஸ் உல்லாச விடுதியில் அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாமவர் ஆவார்.

அந்தப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை காணொளி எடுத்த 35 வயது கான் சூன் சாயுக்கு கடந்த ஆண்டு 15 மாத சிறைத் தண்டனையும் $20,800 அபராதமும் விதிக்கப்பட்டது.

அப்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக 40 வயது யாப் சுன் சியே மீதும் மானபங்கம் செய்ததாக 31 வயது யோங் சுன் ஹோங் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. இவர்கள் தொடர்பான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

சுயநினைவின்றி இருந்த அப்பெண்ணை யாப் உல்லாச விடுதியிலிருந்து ஹோட்டல் ஒன்றுக்குக் கொண்டு சென்றார். அங்கு அப்பெண்ணுக்கு சுயநினைவு திரும்பியபோது தமது அருகில் முன்பின் அறிமுகம் இல்லாதவர் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.

இருவரும் ஒன்றாக அறையைவிட்டு வெளியேறினர். ஹோட்டல் அறைக்கான $70 கட்டணத்தை அப்பெண் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.

தமக்கு நேர்ந்த கொடுமை பற்றி தெரிந்தும் செய்வதறியாது அப்பெண் தவித்ததாகக் கூறப்படுகிறது.

சில நாட்கள் கழித்து அவர் யாப்பை அடையாளம் கண்டு அவரை அணுகினார்.

உண்மையை ஒப்புக்கொண்ட யாப் அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டார்.

நடந்தவற்றை தமது தாயாரிடம் அப்பெண் கூறினார். இதையடுத்து, போலிசாரிடம் புகார் செய்யப்பட்டது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon