விவாகரத்து வேண்டும் என்று கணவர் கேட்டுக்கொண்டதை அடுத்து 13வது மாடியில் இருந்த தங்கள் வீட்டுக்குத் தீ வைத்தார் மலிசா முகம்மது சாயிது. இதனால் 10வது மாடியிலிருந்து 14வது மாடிவரையில் குடியிருப்பாளர்கள் தங்களின் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.
இக்குறும்புச் செயலை செய்ததாக ஒப்புக்கொண்ட 31 வயது மலிசாவுக்கு நேற்று ஐந்து மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஏற்கெனவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள். சென்ற ஆண்டு ஜூலை 15ஆம் தேதியன்று, தமக்கு விவாகரத்து வேண்டும் என்று மலிசாவின் கணவர், மலிசாவுக்குக் குரல் பதிவு ஒன்றை அனுப்பினார்.
அவர்களது பிடோக் நார்த் வீட்டிலிருந்து தான் வெளியேறுவதாக மலிசா அதற்குப் பதிலளித்தார். பின்னர் படுக்கையறையில் தான் இழுத்த சிகரெட் ஒன்றை அணைக்காமல் அறையில் இருந்த கழிவறையை நோக்கி மலிசா எறிந்தார். அது படுக்கை மீது விழுந்து, மெத்தை பற்றிக்கொண்டு எரியத் தொடங்கியது.
தீ பெரிதாகும் என்பதை அறிந்திருந்தும் மலிசா, தன் கணவரைப் பழிவாங்குவதற்காக நெருப்பை அணைக்காமல் வீட்டை விட்டு வெளியேறினார்.
தீச்சம்பவம் குறித்துப் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு போலிசாரும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை அதிகாரிகளும் வந்தனர்.
தீயை அணைப்பதற்குள் வீட்டின் பொருட்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் மதிப்பு $16,820 ஆகிவிட்டது. அண்டைவீட்டாரின் குளிரூட்டுப் பெட்டியும் சேதமடைந்ததில் அதைச் சரிசெய்ய $300 செலவானது. தீயில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

