சுங்கை காடுட் பசுமைப் பெருந்திட்டம்

சுங்கை காடுட் பசுமைப் பெருந்திட்டம்

1 mins read
87c59ff5-14c2-4d27-b15e-a0d1b45f1260
பசுமைப் பெருந் திட்டத்தின்கீழ் சுங்கை காடுட் வட்டாரத்தில் பல பூங்காக்கள் அமைக்கப் படும். இந்தத் திட்டத்தை ஜேடிசி நடைமுறைப் படுத்தும்.புதுப்பிப்புப் பணிகள் முழுமை அடைய 30 ஆண்டுகள் ஆகும்.படம்: ஜேடிசி -

சுங்கை காடுட் வட்டாரத்துக்கான பசுமைப் பெருந்திட்டத்தின்கீழ் புதிய எம்ஆர்டி ரயில் நிலையத்திலிருந்து ஊழியர்கள் வேலையிடத்துக்கு சைக்கிளில் செல்லலாம்.

வழியெங்கும் பூங்காக்கள் அமைத்துத் தரப்படும். மதிய உணவின்போது இந்தப் பூங்காக்களில் அமர்ந்து இயற்கைக் காட்சிகளை அவர்கள் ரசிக்கலாம்.

தொழிற்சாலைகளுக்கு அருகில் இந்தப் பசுமையிடங்கள் அமைந்திருக்கும். இந்தப் பசுமைப் புதுப்பிப்புத் திட்டங்களை வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் கடந்த பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தினார்.

இயற்கையில் நகரம் என்று சிங்கப்பூர் கொண்டுள்ள இலக்குக்கு ஏற்ப இந்தத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதுப்பிப்புத் திட்டங்களில் ஐந்து முக்கிய வடிவமைப்பு உத்திகள் அடங்கும்.

வெப்பத்தைக் குறைக்க சாலை

களுக்குப் பதிலாக இயற்கை நிலத்தை தரையாகக் கொண்டிருத்தல், பசுமையிடங்களை மேம்படுத்துவது, வெள்ளம் ஏற்படாமல் இருப்பதையும் மழைநீர் தேங்கிக்கிடக்காமல் இருப்பதையும் உறுதி செய்தல், தொழிற்துறை மற்றும் நிலவனப்பு ஒன்றுக்கொன்று அருகில் இருப்பது, அந்த வட்டாரத்தில் துடிப்புமிக்க வாழ்க்கைமுறையை ஊக்குவித்தல் ஆகியவை ஐந்து முக்கிய வடிவமைப்பு உத்திகளின் இலக்காகும்.

பெருந்திட்டம் குறித்து ஜேடிசியும் தேசிய பூங்காக் கழகமும் கடந்த ஆண்டு தொடக்கத்தில் கலந்துரையாடல்களை நடத்தின.

இந்தத் திட்டங்களால் சுற்றுப்புறத்துக்கு ஏற்படும் தாக்கத்தை அடுத்த ஆண்டு ஆராய்ந்த பிறகு, அவற்றை மிகுந்த கவனத்துடன் ஜேடிசி நடைமுறைப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.