$21,000 பள்ளிவாசல் நன்கொடைப் பணம் கையாடல்: பெண்ணுக்கு எட்டு வாரச் சிறை

$21,000 பள்ளிவாசல் நன்கொடைப் பணம் கையாடல்: பெண்ணுக்கு எட்டு வாரச் சிறை

2 mins read
49a61130-4f0b-4ea3-bf7b-4111706d0d19
-
Google News Preferred Icon

பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வருவோரிடம் திரட்டிய நன்கொடைப் பணத்தைக் கையாடிய குற்றத்திற்காக அங்கு அலுவலராக வேலை செய்த பெண்ணுக்கு எட்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

நூருல் ஜன்னா முகம்மது லத்திஃப், 28, எனப்படும் அந்தப் பெண் தாமான் ஜூரோங் வட்டாரத்தில் யுங் ஆன் ரோட்டில் உள்ள அசியாகிரின் பள்ளிவாசலில் வேலை செய்தபோது குற்றம் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நன்கொடைப் பணத்தில் $21,000 கையாடல் செய்ததன் மூலம் நூருல் ஜன்னா நம்பிக்கை மோசடி செய்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. குறைந்த வரு

மானக் குடும்பங்களுக்கான நிதி உதவி ஆவணங்கள் பெறுவது தொடர்பான பணிகளுக்காக 2014 ஜூன் மாதம் அவர் பள்ளிவாசலில் சேர்ந்தார்.

2018 அக்டோபர் மாதத்துக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கும் இடையில் பள்ளிவாசலில் திரட்டப்பட்ட நன்கொடைப் பணம் எண்ணப்பட்ட வேளைகளில் இந்தப் பெண் தாமாக தொண்டூழிய உதவிக்குச் சென்றார்.

அந்த சமயங்களில் அவர் கையாடலில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு முறையும் வளாகத்தைவிட்டு வெளியேறும் முன் அவர் $1,500 பணத்தை மறைத்து எடுத்துச்சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. அவரது குற்றச் செயல்கள் வெளிச்சத்துக்கு வந்தது எப்படி என்பது பற்றிய தகவல் இல்லை.

ஆயினும் பள்ளிவாசலின் நிர்வாகத் தலைவர் கடந்த ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி இது தொடர்பாக போலிசிடம் புகார் செய்தார்.

அதன் பின்னர், கையாடிய பணம் முழுவதையும் நூருல் ஜன்னா திருப்பிக் கொடுத்துவிட்டார்.

$15,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள அவர், தமது தண்டனையைத் தொடங்க செப்டம்பர் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.