சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தேவைப்படும் உதவியைப் பெற புதிய இணைய ஆலோசகர்

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தேவைப்படும் உதவியைப் பெற புதிய இணைய ஆலோசகர்

2 mins read
02744a27-d44f-4982-b3dd-6b694cb8309d
கோப்புப்படம்: எஸ்டி, திமத்தி டேவிட் -

சிறிய, நடுத்தர நிறுவனங்கள், தங்களுக்குப் பொருத்தமான அரசாங்க ஆதரவைப் பெறுவதற்குத் தோதாக மேலும் உதவிகள் கிடைக்க இருக்கின்றன.

எந்த நிறுவனத்துக்கு எந்த திட்டம் ஏற்றது, பொருத்தமானது என்பதைச் சுட்டிக்காட்டி உதவுவதற்காக புதிய இணைய ஆலோசனை சேவை அடுத்த செவ்வாய்க்கிழமை முதல் செயல்படும்.

வர்த்தக தொழில் துணை அமைச்சர் லோ யென் லிங் வியாழக்கிழமை நடந்த மெய்நிகர் செய்தியாளர் கூட்டத்தில் இதனை அறிவித்தார்.

இத்தகைய நிறுவனங்கள் தங்கள் ஆற்றலைப் பெருக்கிக்கொள்ள இப்போது 11 நிலையங்கள் ஆலோசனை கூறி உதவி வருகின்றன.

பொருத்தமான அரசாங்க ஆதரவுத் திட்டம் எது என்பதைக் கண்டுபிடிப்பது தங்களுக்குச் சிரமமாக இருப்பதாக சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தெரிவித்துள்ளன என்று திருவாட்டி லோ கூறினார்.

புதிதாக தொடங்க இருக்கும் இணைய ஆலோசனை சேவை, ஒரு நிறுவனம் அளிக்கும் பதில்களுக்கு ஏற்ப பொருத்தமான ஆதரவு திட்டங்களைப் பரிந்துரைக்கும்.

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ஏற்கெனவே தொழில்துறை ஆலோசகர்கள் உதவி வருகிறார்கள். இதற்கு மேலும் இப்போது இத்தகைய ஒரு நிறுவனங்களுக்கு புதிய உதவி கிடைக்கிறது.

கொவிட்-19 காரணமாக நிறுவனங்கள் மின்னிலக்கமயமாக வேண்டிய அவசியம் கூடி இருக்கிறது. அவை உருமாறிக்கொள்ள வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டு இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் புதிதாக தொடங்கப்படும் இணைய ஆலோசனைச் சேவை, இத்தகைய நிறுவனங்களுக்கு நல்ல உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

இந்தப் புதிய ஏற்பாடு GoBusiness என்ற அரசாங்கத்தின் பெரிய முயற்சியின் ஓர் அங்கமாக இடம்பெறுகிறது.

உற்பத்தித்திறன் உதவி மானியம் கேட்டு சென்ற மாத நிலவரப்படி என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்புக்கு 18,000க்கும் அதிக விண்ணப்பங்கள் வந்தன.

அவற்றில் குறைந்தபட்சம் 10,000 விண்ணப்பங்கள் தொழில்களைத் தொடர்ந்து நடத்த உதவி நாடின.

நிறுவனங்கள் மின்னிலக்கமயமாகி ஆற்றலுடனும் போட்டித்திறனுடனும் திகழ்வதற்கு ஆகும் செலவில் 80 விழுக்காட்டை இந்த மானியம் ஈடு செய்கிறது.

என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு ஆதரவு அளிக்கும் கடன்களில் 90%க்கு பொறுப்பெடுத்துக் கொண்டு அதன் மூலமாகவும் அரசு இத்தகைய நிறுவனங்களுக்கு உதவி வருகிறது.