பத்து இடங்களில் வான்கோலம்

பத்து இடங்களில் வான்கோலம்

2 mins read
33008250-af85-43b9-a3ca-e1f23f218d1c
-

வாணவேடிக்கைகளும் சிறப்பு நிகழ்வுகளும் இவ்வாண்டு தேசிய தினத்திற்காக நாடெங்கும் பல பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

வாணவேடிக்கை

பொதுமக்கள் இவ்வாண்டு தேசிய தின வாணவேடிக்கைகளை 10 வெவ்வேறு இடங்களில் கண்டு ரசிக்கலாம். அங் மோ கியோ, தெம்பனிஸ், உட்லண்ட்ஸ், பீஷான், போன விஸ்தா, பொங்கோல், செம்பவாங், இயூ டீ, ஜூரோங் லேக் கார்டன்ஸ், மரினா நீர்த்தேக்கம் ஆகிய வட்டாரங்களில் கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களுக்கு நீடிக்கவுள்ள வாணவேடிக்கைக் காட்சிகள், இரவு 8.20 மணியளவில் ஒரே சமயத்தில் தொடங்கும்.

மாலையில் 'ஸ்டார் விஸ்தா'வில் நடைபெறவுள்ள தேசிய தின அணிவகுப்பு கலைநிகழ்ச்சியில் இறுதி அங்கமாக பற்றுறுதிச் சடங்கு இடம்பெறும். அதையடுத்து தேசிய கீதம் பாடப்படும். அதன் பின்னர் வாணவேடிக்கை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. வாணவேடிக்கைகளை 1 கிலோமீட்டர் முதல் 8 கிலோ மீட்டர் வரையிலான தொலைவிலிருந்து காண முடியும் என்றும் 15 முதல் 62 மாடி உயரம் வரை அவை வெடிக்கும் என்றும் கூறப்பட்டது. இதனால் வீட்டில் இருந்தவாறே வானில் உயரும் வண்ணக் கோலங்களை மக்கள் காண முடியும்.

பற்றுறுதி, தேசிய கீதம்

இந்நிலையில் பற்றுறுதி மற்றும் தேசிய கீதம் இடம்பெறும் அங்கங்களில் அனைத்து சிங்கப்பூரர்களும் பங்கேற்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.

நிகழ்ச்சியையும் தேசிய தின அணிவகுப்பு அனுபவத்தையும் அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே நோக்கம் என்று நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறப்பட்டது. 'ரெட் லயன்ஸ்'

பிரபல வான்குடை சாகச வீரர்கள் நாளை காலை 9 மணியளவில் இங் டெங் ஃபோங் மருத்துவமனை மற்றும் செங்காங் பொது மருத்துவமனை அருகில் உள்ள திடல்களில் தரையிறங்க உள்ளனர்.

தேசிய கொடியின் பவனி

காலை 10.30 மணி முதல் 11.25 மணி வரையில் இரண்டு 'சினூக்' ஹெலிகாப்டர்கள் சிங்கப்பூர் கொடியை 1,000 அடி உயரத்தில் பறக்கவிட்டவாறு மேற்கு மற்றும் கிழக்குத் திசைகளை நோக்கி பறந்து செல்லும்.

ஒற்றுமை கர்ஜனை

காலையில் தேசிய தின அணிவகுப்பு பாடாங்கில் நடைபெறும்போது, 10.45 மணிக்கு ஆறு 'எஃப்-15' போர்க்கால விமானங் களின் வான்சாகசக் காட்சி தொடங்கும். கொவிட்-19க்கு எதிராகப் போராடும் முன்களப் பணியாளர்களைச் சிறப்பிக்க விமானங்கள் எட்டு மருத்துவமனைகளைக் கடந்து வானில் செல்லும்.

படைப்பிரிவுகளின் ஊர்வலம்

சிங்கப்பூர் ஆயுதப் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் போலிஸ் படை ஆகியவற்றின் 66 ராணுவ வாகனங்களும் வளங்களும் காலை 10 மணி முதல் பகல் 1 மணிவரை ஐந்து வெவ்வேறு பாதைகளில் ஊர்வலம் செல்லும். 100 முன்களப் பணியாளர்களும் வாகனங்களில் இருப்பர்.

நீரில் கலன்கள் பவனி

சிங்கப்பூர் கடற்துறை துறைமுக ஆணையம், கடலோர காவல் படை, சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, சிங்கப்பூர் குடியரசு கடற்படை ஆகியவற்றின் 13 கலன்கள் மரினா சவுத் நிறுத்தத்திலிருந்து நீரில் பவனி செல்லும். சிங்கப்பூரர்கள் ஒற்றுமையுடன் இணைந்திருக்க கோரி, பயணத்தை முடிக்கவுள்ள சமயத்தில் கலன்கள் 15 வினாடிகளுக்கு ஒலி எழுப்பும்.