புத்தாக்க இந்திய கலையகம் இன்று இரவு 7 மணிக்கு 'கலைத் தூரிகை' என்ற முழுநீள முப்பரிமாண மெய்நிகர் நிகழ்ச்சியைப் படைக்க உள்ளது. அன்று முதல் இன்று வரை கலைப்படைப்புகளை வழங்கி வரும் உள்ளூர் கலைஞர்களுடன் வெளிநாட்டுப் படைப்பாளர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.
ஐந்து வயது முதல் 90 வயது வரை உள்ள படைப்பாளர்களின் அங்கங்கள் தொழில்நுட்ப ஏற்றத்துடன் முதல்முறையாக 360 ஒலி, ஒளி அமைப்பில் கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சிகளுடன் வெளிப்புறப் படப்பிடிப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. கரையோரப் பூந்தோட்டம், மவுண்ட் ஃபேபர் கம்பிவண்டி, செந்தோசா எனப் பல அமைப்புகளின் ஒத்துழைப்புடன் நிகழ்ச்சி இணையத்திற்காக உருவாக்கம் கண்டுள்ளது.
செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயரின் சிறப்புரை, தமிழர்ப் பேரவையின் தலைவர் திரு வெ. பாண்டியன், திரு ESJ சந்திரன், திரு SA நாதன், திரு சங்கர் ராஜன், திரு கார்த்திகேயன், டாக்டர் டி.சந்துரு, திருமதி மனுநீதி ஆகியோர் பகிர்ந்துகொள்ளும் தேசிய தின நினைவலைகள், அன்று முதல் இன்றுவரை வரலாற்றில் தடம்பதித்த சிங்கப்பூரை நம் கண்முன் படம்பிடித்து காட்டும்.
கவிஞரேறு அமலதாசன் இயற்றிய 'சிங்கப்பூர் என்று' எனும் தேசிய விருது பெற்ற பாடல், சி. குணசேகரனின் இசையமைப்பில் புதிய காட்சி வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர், இலங்கை கலைஞர்களின் பாடல்கள், உள்ளூர்க் கலைஞர்களின் ஆடல், நகைச்சுவை அங்கங்களும் உள்ளன. 'கலைத் தூரிகை' 51 சமூக ஊடகத் தளங்களில் ஒளி பரப்பாக உள்ளது.

