இந்த ஆண்டின் தேசிய தின கொண்டாட்டத்தையொட்டி ஆகஸ்ட் 15ஆம் தேதி புதிய ஈஸ்ட் கோஸ்ட் நிலவரம் அறியும் உலா தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த உலா, ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை உள்ளடக்கும்.
துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நேற்று இதனை தெரிவித்தார்.
ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியில் போட்டியிட்டு வென்ற மக்கள் செயல் கட்சி அணிக்குத் தலைமை வகித்த திரு ஹெங், நேற்று பிடோக்கில் மெய்நிகர் தேசிய தின பற்றுறுதி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். திரு ஹெங் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சராகவும் நிதி அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார்.
அவர் தமது குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிடோக் சமூக மன்றத்தில் பற்றுறுதி நிகழ்ச்சியில் உரையாற்றினார்.
"ஈஸ்ட் கோஸ்ட்டில் தேசிய தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான நாங்கள் ஐவரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ஈஸ்ட் கோஸ்ட் நிலவரம் அறியும் உலாவைத் தொடங்குகிறோம்.
"ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி, பிடோக் டவுன் சென்ட்ரலில் இருந்து புலாவ் உபின் வரை பரந்து விரிந்த தொகுதியாகும். அது பெட்ரா பிராங்கா வரை கூட விரிவடைந்து இருக்கிறது," என்று திரு ஹெங் கூறினார்.
"ஈஸ்ட் கோஸ்ட்டில் இருக்கும் பல ஆர்வமிக்க இடங்களையும் சிறப்புமிக்க அம்சங்களையும் நாங்கள் வெளிக்கொணர்கிறோம். ஈஸ்ட் கோஸ்ட் தொகுதியை அலசி ஆராய்வதில் இது ஒரு பகுதி.
"ஆகையால் ஈஸ்ட் கோஸ்ட் ஃபேஸ்புக் பக்கத்தில் மெய்நிகர் ரீதியில் எங்களுடன் சேர்ந்துகொள்ளுங்கள்," என்று திரு ஹெங் மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.
லிம் சுவீ சே, லீ யி ஷியான் ஆகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேற்றைய நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அந்நிகழ்ச்சியில் 'ஸூம்' செயலி வழியாக 500க்கும் அதிக பிடோக் குடும்பங்களும் பங்கெடுத்துக்கொண்டன.
அந்த நிகழ்ச்சி ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடியாகப் ஒளிபரப்பப்பட்டது.
சேர்ந்து பாடும் நிகழ்ச்சி, மெய்நிகர் உடற்பயிற்சி, தேசிய தின புதிர்ப் போட்டி, பற்றுறுதி நிகழ்ச்சி, தேசிய கீதத்தைப் பாடும் நிகழ்ச்சி ஆகிய பலவும் நேற்றைய நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்தன.
சிங்கப்பூரர்கள் ஐக்கியமாக, மீள்திறனுடன், உறுதியுடன் கொவிட்-19 கிருமித்தொற்றைச் சமாளித்து இருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட திரு ஹெங், இது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
சமூகம் மேற்கொண்ட முயற்சிகளையும் அவர் சுட்டிக்காட்டினார். மின்னிலக்க ரீதியில் பலவற்றையும் செய்வது எப்படி என்பதை முதியவர்கள் கற்றுக்கொண்டார்கள்.
பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கை போன்றவற்றை நிறுவன முதலாளிகள் மிக முக்கியமானவையாகக் கருதினார்கள்.
வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்துகொள்வது போன்ற காரியங்களைக் கடைப்பிடித்து அதன்மூலம் குடிமக்கள் பொறுப்புள்ள வகையில் நடந்துகொண்டார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
"ஒன்றாகச் சேர்ந்து செயல்பட்டதன் விளைவாக சமூக அளவிலான கொவிட்-19 தொற்றுகள் கடந்த சில வாரங்களில் 10க்கும் குறைந்துவிட்டன.
"இருந்தாலும் நாம் தொடர்ந்து விழிப்புடன் இருந்து வரவேண்டும். பாதுகாப்பு நிபந்தனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். கொவிட்-19 மீண்டும் தலைதூக்குவதை இதன்மூலம் தடுத்துவிடலாம்," என்று திரு ஹெங் தெரிவித்தார்.

