கடுமையான நீண்ட நெடும் போராட்டம்

4 mins read
22e2cb42-d600-4ca7-bfaa-a44579a92aab
(கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

சிங்கப்பூரின் ஆகப்பெரிய வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியான சுங்கை தெங்கா லாட்ஜில் வசிக்கும் கட்டுமானத் துறை ஊழியரான அஜீத் குமார், 24, அண்மைய மாதங்களில் அங்கு நிலவரம் மாறிவிட்டதாகக் கூறுகிறார்.

பதினோரு பேருடன் அவர் தங்கியிருக்கும் அறை இப்போது சுத்தமாக இருப்பதாகச் சொன்னார். அறையின் நுழைவாயிலுக்கு அருகே உள்ள கியூஆர் குறையீட்டைக் கைபேசி செயலியைக் கொண்டு தினமும் இருமுறை அவர் வருடுகிறார். இதன்மூலம் தாம் இருக்கும் இடத்தை அதிகாரிகளுக்கு அவர் தெரிவிக்கிறார்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு வேலைக்குச் செல்ல திரு அஜீத் ஆவலுடன் இருக்கிறார். ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து இங்குள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் கொவிட்-19 நோய்ப் பரவலுக்கு எதிரான போராட்டத்தில் செய்யப்பட்டிருக்கும் பல மாற்றங்களில் இதுவும் ஒன்று. ஏப்ரல் மாதத்தில்தான் இங்குள்ள சில தங்கும் விடுதிகள் தனிமைப்படுத்தும் இடங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.

தங்கும் விடுதிகளில் வசிக்கும் 323,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொரோனா கிருமித்தொற்றுப் பரிசோதனை நேற்று முன்தினம் நடந்து முடிந்தது.

கல்வி அமைச்சரும் கொரோனா கிருமிப் பரவலை முறியடிக்க அமைக்கப்பட்ட அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு லாரன்ஸ் வோங், இதை ஒரு "மாபெரும் பணி" என்று தமது ஃபேஸ்புக் பதிவில் கூறினார். கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, 10ல் ஒன்பது வெளிநாட்டு ஊழியர்கள், அல்லது 273,000 பேர் கொவிட்-19ல் இருந்து குணமடைந்துவிட்டனர் அல்லது அவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. நான்கு மாதங்களாக நடந்த நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பிறகுதான் தங்கும் விடுதிகளில் தற்போதைய நிலை எட்டப்பட்டுள்ளது. வேகமாக மாறிவரும் சூழலுக்கேற்ப நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

ஒரு கட்டத்தில் ஆகப்பெரிய கிருமித்தொற்றுக் குழுமமாக கண்டறியப்பட்ட சுங்கை தெங்கா லாட்ஜ், கடந்த மாதம் கொவிட்-19ல் இருந்து விடுவிக்கப்பட்டது.ஏப்ரல் மாத தொடக்கத்தில் அந்த விடுதி தனிமைப்படுத்தும் இடமாக அறிவிக்கப்பட்டது. அங்கு வசித்த 23,000 வெளிநாட்டு ஊழியர்களை நிர்வகிப்பது சாதாரண காரியம் அல்ல என்றார் அந்த விடுதியை நிர்வகிக்கும் டிஜி25 நிறுவனத்தின் தலைமை செயலாக்க அதிகாரி சைமன் லீ.

"அந்தக் காலகட்டத்தில், இரு வாரங்களாக நாள் ஒன்றுக்கு எனக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தூக்கம் கிடைத்தது," என்று கூறிய அவர், ஊழியர்கள் அனைவரையும் விடுதியில் தங்கவைத்தது தலைகால் புரியாத அவசர நிலை என்று வர்ணித்தார். குறிப்பாக, அனைவருக்கும் மூன்று வேளை உணவு வழங்குவதும் சுத்தம் சுகாதாரத்தை நிலைநாட்டுவதும் பெரிய சவாலாக அமைந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

ஒரு சில தங்கும் விடுதிகள் சுகாதாரமற்ற நிலையில் இருந்தது அப்போது வெளிச்சத்திற்கு வந்தது. எஸ்11@பொங்கோல் விடுதியில் அறைகள் கூட்டம் நிறைந்து சுகாதாரமின்றி இருந்தது குறித்து ஏப்ரல் 6ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.

நிலவரத்தை மேம்படுத்த 'ஃபாஸ்ட்' என்றழைக்கப்படும் குழுக்களை மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ அறிவித்திருந்தார். மனிதவள அமைச்சு, போலிஸ், ராணுவம் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் அக்குழுக்களில் இடம்பெற்றுள்ளனர். விடுதிகளில் கடுமையான சுகாதார நடைமுறைகள் செயல்படுத்தப்பட்டன. ஊழியர்களுக்கு தினமும் மூன்று வேளை உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. உடல் நலம் இல்லாதவர்களைப் பரிசோதித்து சிகிச்சை அளிக்க மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன. அத்தியாவசிய சேவை துறைகளில் பணியாற்றும் உடல் நலமுடைய ஊழியர்கள் மிதக்கும் விடுதிகளுக்கும் காலியாக இருந்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளுக்கும் மாற்றிவிடப்பட்டனர். இதன்மூலம், கிருமி தொற்றிய ஊழியர்களிடமிருந்து அவர்களைப் பாதுகாக்க முடிந்தது. தங்கும் விடுதிகளில் வசிக்கும் 323,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கும் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்த மே மாத நடுப்பகுதியில் அமைச்சர் லாரன்ஸ் வோங் அறிவித்திருந்தார்.

சுங்கை தெங்கா லாட்ஜ் விடுதியில் 36 பேர் கொண்ட 'ஃபாஸ்ட்' குழுவை வழிநடத்தும் துணை உதவி போலிஸ் ஆணையர் ஷூ சூ யென், விடுதியில் வசிக்கும் ஒவ்வொரு ஊழியரின் நிலையைக் கண்காணிக்க விடுதி நடத்துநருடன் ஃபாஸ்ட் குழு பணியாற்றியதாகக் கூறினார். தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவக் குழு ஒன்றும் விடுதியில் பணியமர்த்தப்பட்டது. சுங்கை தெங்கா லாட்ஜ் விடுதியில் உள்ள புளோக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக கொரோனா கிருமித்தொற்றிலிருந்து விடுவிக்கப்பட இந்த ஏற்பாடு வழிவகுத்தது.

சுங்கை தெங்கா லாட்ஜில் தற்போது சுமார் 19,000 ஊழியர்கள் தங்கியுள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 12,000 பேர் வேலைக்குச் செல்கின்றனர்.

கடந்த வியாழக்கிழமை நிலவரப்படி, கட்டுமானம், கப்பல் பட்டறை, செயல்முறை பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த ஏறத்தாழ 265,000 வெளிநாட்டு ஊழியர்கள் வேலைக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்களில் பெரும்பாலானோர் இம்மாத இறுதிக்குள் வேலைக்குச் செல்ல முடியும் என்று அமைச்சர் வோங் நேற்று முன்தினம் கூறினார்.