புதிய நடத்தை விதித்தொகுப்பு 'பாதசாரிகள் நடப்பதை கண்காணிப்பது நோக்கமல்ல'

புதிய நடத்தை விதித்தொகுப்பு 'பாதசாரிகள் நடப்பதை கண்காணிப்பது நோக்கமல்ல'

1 mins read
b98b38b4-e8b0-474e-9898-bfbf740bf70d
இன்னொருவரை முந்திச்சென்றால் ஒழிய எல்லா நேரங்களிலும் நடைபாதையின் இடது பக்கத்திலேயே செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

பாதசாரிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நடத்தை விதித்தொகுப்பின்கீழ், நடைபாதைகளில் பாதசாரிகள் எவ்வாறு நடந்து செல்கின்றனர் என்ற அடிப்படையில் கண்காணிக்கப்பட மாட்டார்கள் என்று போக்குவரத்து அமைச்சின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் கூறி உள்ளார்.

நடத்தை விதித்தொகுப்பு அறிமுகப்படுத்தப்பட்டது சர்ச்சையை எழுப்பியதைத் தொடர்ந்து அவர் இதுகுறித்து கருத்துரைத்தார்.

இந்த நடத்தை விதித்தொகுப்பு நடைபாதைகளில் தங்களது உரிமையைக் குறைத்துவிடுமோ என்று பாதசாரிகள் சிலர் கவலை அடைந்துள்ளனர்.

வேறு சிலரோ, நடைபாதைகளில் பாதுகாப்பாகச் செல்வது சைக்கிளோட்டிகள் மற்றும் தனிநபர் நடமாட்ட சாதனங்களை ஓட்டுவோரின் பொறுப்பு என்று கருதுகின்றனர்.

கடந்த ஈராண்டுகளாக உந்து நடமாட்ட ஆலோசனைக் குழு நடத்திய கலந்தாலோசனை கூட்டங்களில், பாதசாரிகள், சைக்கிளோட்டிகள், நடமாட்ட சாதனங்களை ஓட்டுபவர்கள் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பார்க்காமல் கைபேசியிலேயே கவனம் செலுத்தியது தெரியவந்ததாக திரு பே விளக்கினார்.

சைக்கிளோட்டப் பாதைகள் இருந்தும்கூட தனிநபர் நடமாட்ட சாதனங்களை ஓட்டும் ஒரு சிலர் நடைபாதைகளில் செல்வதைத் தாம் கவனித்ததாக அவர் சொன்னார்.

"இத்தகையோரின் நடத்தையால் நடைபாதைகளில் அனைவரது பாதுகாப்புக்கும் பங்கம் ஏற்படுகிறது," என்று திரு பே கூறினார்.

உந்து நடமாட்ட ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு நடைபாதை மற்றும் சைக்கிளோட்டப் பாதையைப் பயன்படுத்துவோருக்கான நடத்தை விதித்தொகுப்பை விரிவு படுத்தி பாதசாரிகளையும் அதில் இணைத்துக்கொள்ள போக்குவரத்து அமைச்சு முடிவெடுத்தது.

பாதசாரிகளுக்கான நடத்தை விதித்தொகுப்பு அவர்களுக்கு பாதுகாப்பு உத்திகளை வழங்குவதை திரு பே சுட்டினார்.