தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்சார கார் பகிர்வு நிறுவனமான 'புளூஎஸ்ஜி'யின் புதிய மைல்கல்: ஒரு மி. முறை கார் வாடகை

2 mins read
fced42a1-8873-48d5-ae20-e4dbe5cb34e9
குவீன்ஸ்திரீட்டில் உள்ள மின்னூட்டு நிலையத்தில் புளூஎஸ்ஜி கார்கள் மின்னூட்டப்படுகின்றன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

மின்சார கார் பகிர்வு நிறுவனமான 'புளூஎஸ்ஜி' ஒரு மில்லியன் முறை அதன் கார்களை வாடகைக்கு விட்டதால் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2017ஆம் ஆண்டில் புளூஎஸ்ஜி இங்கு செயல்படத் தொடங்கியதை அடுத்து அந்நிறுவனம் இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.

நிலப் போக்குவரத்து ஆணையத்தின் முன்னோட்டத் திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகப்படுத்தப்பட்ட புளூஎஸ்ஜியின் சேவையை 80,000க்கும் அதிகமான சந்தாதாரர்கள் பயன்படுத்துகின்றனர். சந்தா கட்டணமாக மாதத்திற்கு $8லிருந்து அதன் காரை அவர்கள் பயன்படுத்துகின்றனர். அந்நிறுவனத்திடம் 667 மின்சார கார்கள் உள்ளன.

கொரோனா கிருமிப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்த காலகட்டத்தில், புளூஎஸ்ஜி கார்களை வாடகைக்கு எடுப்போரின் எண்ணிக்கை குறைந்தது. என்றாலும், கிருமிப் பரவல் முறியடிப்புத் திட்டம் முடிவுக்கு வந்த ஜூன் 2ஆம் தேதிக்குப் பிறகு புளூஎஸ்ஜி நிறுவனம் வலுவான வளர்ச்சி கண்டதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.

புளூஎஸ்ஜி கார்கள் மாதத்திற்கு சுமார் 100,000 முறை வாடகைக்கு விடப்படுவதாக புளூஎஸ்ஜி நிர்வாக இயக்குநர் ஃபிராங்க் விட்டே தெரிவித்தார். மாதத்திற்கு 4,000 புதிய சந்தாதாரர்கள் புளூஎஸ்ஜியில் சேருகின்றனர்.

கடந்த டிசம்பரில் இரு புதிய சந்தா திட்டங்களை புளூஎஸ்ஜி தொடங்கியது. அவை வெற்றிகரமாக அமைந்ததாக அது கூறியது.

மாத்திற்கு $18 என ஆறுமாத கால சந்தா திட்டத்தையும் மாதத்திற்கு $8 என அடிப்படை சந்தா திட்டத்தையும் புளூஎஸ்ஜி நிறுவனம் வழங்குகிறது.

நிமிடத்திற்கு 33 காசு என்ற வாடகைக் கட்டணமும் இவ்விரு திட்டங்களில் அடங்கும்.

மலிவான கட்டணத்தில் நீண்ட பயணங்களுக்கான இதர வாடகைத் திட்டங்களும் புளூஎஸ்ஜியிடம் உள்ளன. மூன்று மணி நேர வாடகைச் சேவைக்கு $39.90யும் ஐந்து மணி நேர வாடகைச் சேவைக்கு $49.90யும் வசூலிக்கப்படுகிறது.

தற்போது புளூஎஸ்ஜி நிறுவனத்திற்கு 345 மின்னூட்டு நிலையங்களில் 1,371 மின்னூட்டுச் சாதனங்கள் உள்ளன. தீவு முழுவதும் உள்ள பொது வீடமைப்புப் பேட்டைகள், தொழிற்பேட்டைகள், கடைத்தொகுதிகள், சாங்கி விமான நிலையம், செந்தோசா, நகர்ப் பகுதி ஆகியவற்றில் இந்த மின்னூட்டு நிலையங்கள் அமைந்துள்ளன.

"பிரபலமான, வசதிப்பட்ட இடங்களில் மின்னூட்டு நிலையங்கள் அமைந்திருப்பதால், தனியார் கார் வைத்திருப்பதற்கு நம்பகத்தன்மையுடைய மாற்று வழியாக புளூஎஸ்ஜி விளங்குகிறது.

"பொதுப் போக்குவரத்து பயன்பாட்டுடன் புளூஎஸ்ஜி கார்களைப் பயனாளர்கள் அவ்வப்போது பயன்படுத்துவதாக ஆய்வுகள் காட்டுகின்றன," என்று திரு விட்டே கூறினார்.