சான் சுன் சிங்: கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலுக்கு முந்தைய உலகிற்கு சிங்கப்பூர் திரும்பிச் செல்ல முடியாது புதிய பாதையை வகுக்க வேண்டும்

சிங்கப்பூர், கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலுக்கு முந்தைய உலகிற்குத் திரும்பிச் செல்ல முடியாது என்பதால் இப்போது புதிய பொருளியலை உருவாக்குவதன்மூலம் புதிய பாதையை வகுக்க வேண்டும் என்று, வர்த்தக, தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டின் முதற்பாதியில் சிங்கப்பூர் பொருளியல் 6.7 விழுக்காடு சுருங்கியதாக நேற்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

எனவே இவ்வாண்டு பொருளியல் 5 முதல் 7 விழுக்காடு வரை சுருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலுக்கு முந்தைய உலகிற்கு சிங்கப்பூர் திரும்பிச் செல்ல முடியாது என்பதே “வலி தரும் உண்மை” என்று திரு சான் கூறினார்.

கிருமித்தொற்று அலைகள் மீண்டும் மீண்டும் எழுவதால் பொருளியல் மீளுவதற்கு காலம் எடுக்கும் என்றார் அவர்.

“தொழில்துறைகளில் பரவலாக மீட்சி ஏற்ற இறக்கமாக இருக்கும். சில துறைகள் கட்டங்கட்டமாக மீட்சியடையும். மற்ற துறைகள் நிரந்தரமாக மாறிவிடும்,” என்று திரு சான் சொன்னார்.

1998ஆம் ஆண்டு ஆசிய நிதி நெருக்கடி, 2009ஆம் ஆண்டு உலக நிதி நெருக்கடி போன்றவை போல தற்போதைய நெருக்கடி இல்லை என்று அவர் கூறினார்.

“நோய்ப் பரவல் சூழல் முடியும்வரை காத்திருந்தால், நாம் தற்போது இருக்கும் நிலையைவிட மோசமான நிலையை எட்டிவிடக்கூடும்.

“எனவே, கொவிட்-19 சூழல் முடியும்வரை நாம் காத்திருக்க முடியாது,” என்று அவர் சொன்னார்.

சிங்கப்பூர் இப்போதே புதிய பொருளியலை உருவாக்கத் தொடங்கி, மக்களுக்கு கூடுதலான, மேம்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பழைய நிலைக்கு மீண்டும் திரும்ப முடியாத அளவிற்கு உலகம் நான்கு வழிகளில் மாறிவிட்டதாக திரு சான் கூறினார்.

முதலாவதாக, கடந்த 50 ஆண்டு காலமாக சிங்கப்பூர் செழித்தோங்க வகைசெய்த புவி அரசியல் சூழல் மாறிவிட்டது.

சக்திவாய்ந்த நாடுகளுக்கு இடையிலான போட்டியும் பதற்றமான சூழலும் அரசியலில் மட்டுமல்லாமல் வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு ஆகிய அம்சங்களிலும் நிலவுவதாக அவர் சொன்னார்.

“சிக்கலான உலகில் இதுபோன்ற மோதல்களைத் தவிர்க்க முடியாது. பொருளியல் சக்தி கொண்ட நாடுகளுக்கு இடையிலான மோதலில் நாம் சிக்கிவிடுவதைத் தவிர்க்க வேண்டும்,” என்றார் திரு சான்.

இரண்டாவதாக, உலகளவில் நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி, விநியோகத் தொடரை மாற்றி அமைக்கின்றன. வட்டார தலைமையகங்களுக்கான தேவையை அவை மறுஆய்வு செய்கின்றன.

“ஒரே தளத்தைச் சார்ந்திருக்காமல் இருக்க நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை பல்வகைப்படுத்த விரும்புகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.

அப்படியென்றால் சில புதிய முதலீடுகள் சிங்கப்பூர் பக்கம் வந்தாலும், ஏற்கெனவே உள்ளவை மற்ற நாடுகளுக்கு மாற்றப்படலாம்.

“நம்மை நாம் வேகமாக மாற்றி அமைத்துக்கொள்ளவில்லை என்றால், புதிய வாய்ப்புகள் நம்மை கடந்துவிடும்,” என்று எச்சரித்த திரு சான், அறிவுசார் சொத்து பாதுகாப்பு போன்றவற்றை சிங்கப்பூர் மேம்படுத்த வேண்டும் என்றார்.

மூன்றாவதாக, வேலைகள் மாறிவிட்டன. வீட்டிலிருந்து வேலை செய்யும் நடைமுறை நடப்பில் இருப்பதால், மற்ற நாடுகளில் இருப்பவர்கள் அவர்கள் வீட்டில் இருந்தவாறே இங்கு சிங்கப்பூரர்கள் செய்யும் வேலையைச் செய்ய முடியும்.

குறிப்பாக நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் (பிஎம்இடி) பிரிவினரை இந்த நிலை பாதிக்கும். அவர்களது வேலைகளை மெய்நிகர் மூலமாகவோ தானியக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு வசதி மூலமாகவோ செய்ய முடியும்.

பொருளியல் வளர்ச்சி குறைவதால் சமூக அளவில் உரசல்களுக்கு வழிவிடப்படுகிறது. வசதி உள்ளவர்களுக்கும் வசதி குறைந்தவர்களும் இடையே, வெளிநாட்டினருக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் இடையே, குடிமக்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் இடையே உரசல் ஏற்படக்கூடும் என்று திரு சான் சொன்னார்.

எனினும், உலகிலிருந்து சிங்கப்பூரர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார்.

“மிகவும் மாறுபட்ட நிச்சயமற்ற எதிர்காலத்திற்குப் புதிய பாதையை நாம் வகுக்க வேண்டும்,” என்றார் அவர்.

 

மேலும் செய்தி பக்கம் 2ல்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon