அனைத்து வெளிநாட்டு ஊழியர் விடுதிகளும் தொற்றிலிருந்து விடுபட்டுவிட்டதாக அறிவிப்பு

ஆறு வெளிநாட்டு ஊழியர் விடுதிகளில் தனிமைப்படுத்தப்படும் இடங்களாகச் செயல்படும் 17 புளோக்குகள் தவிர மற்ற அனைத்து வெளிநாட்டு ஊழியர் விடுதிகளும் கொவிட்-19 தொற்றில் இருந்து விடுபட்டுவிட்டதாக மனிதவள அமைச்சு அறிவித்து இருக்கிறது.

இதையடுத்து, கட்டுமானம், கடல்துறை, செயல்முறைப் பொறியியல் ஆகிய துறைகளைச் சேர்ந்த 315,000 ஊழியர்கள் மீண்டும் வேலை செய்யத் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இம்மாதம் 4ஆம் தேதி இந்த எண்ணிக்கை 265,000ஆக இருந்தது.

விடுதி நடத்துநர்கள், முதலாளிகள் மற்றும் ஊழியர்கள் கூடுதல் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பட்சத்தில் இன்னும் அதிகமான ஊழியர்கள் வேலைக்குத் திரும்ப முடியும். தொடர்புகளின் தடங்களைக் கண்டறிய உதவும் ‘டிரேஸ்டுகெதர்’ செயலியை ஊழியர்கள் தங்களது கைபேசிகளில் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பது அந்நிபந்தனைகளில் ஒன்று.

அந்த 17 புளோக்குகளிலும் அரசாங்கத்தின் தனிமைப்படுத்தும் இடங்களிலும் ஏறத்தாழ 22,500 ஊழியர்கள் இன்னும் இருப்பதாகச் சொல்லப்பட்டது.

 

புதிய தொற்றுச் சம்பவங்கள்

 

இதனிடையே, கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்ட சில விடுதிகளில் மீண்டும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மனிதவள அமைச்சு, கட்டட, கட்டுமான ஆணையம், பொருளியல் வளர்ச்சிக் கழகம், சுகாதார மேம்பாட்டு ஆணையம் ஆகியவை ஒரு கூட்டறிக்கை மூலமாக நேற்று முன்தினம் இதனைத் தெரிவித்தன. ஆயினும், எத்தனை பேர் பாதிக்கப்பட்டனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

இதையடுத்து, விடுதிகளில் கிருமித்தொற்றை அடியோடு அழிக்கும் முனைப்புடன் கடந்த நான்கு மாதகாலமாக எடுக்கப்பட்டு வந்த தீவிர முயற்சிகள் வீணாகி விடக்கூடாது எனும் நோக்கத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

“அதிகமான ஊழியர்கள் வேலைக்குத் திரும்பத் தொடங்கி உள்ளனர். இதனால் அவர்கள் வெளியே சென்று வருவது அதிகரிக்கும். ஆகையால், புதிதாகக் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஏற்படாதபடி ஒவ்வொருவரும் கூடுதல் விழிப்போடு இருப்பது மிக மிக அவசியம்,” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon