சுடச் சுடச் செய்திகள்

‘தற்போதைய சூழலில் முழுமையான தானியக்க வாகனம் சாத்தியமில்லை’

ஓட்டுநரே இல்லாமல் மனிதனைப் போல் இயங்கக்கூடிய தானியக்க வாகனத்தை உருவாக்குவதில் ‘மோஷனல்’ நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இருப்பினும் தற்போதைய காலகட்டத்தில் முழுமையான தானியக்க வாகனம் சாத்தியமில்லை என்றார் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு கார்ல் இக்னேமா.

அத்தகைய தொழில்நுட்பம், ஆக உயர்ந்த நிலையான ஐந்தாவது நிலைக்குரியது என்றும் தற்போது நான்காவது நிலையையே தம் நிறுவனம் குறிவைத்துள்ளது என்றும் அவர் கூறினார்.

அவ்வகையில் குறிப்பிட்ட மெய்நிகர் புவிசார்ந்த எல்லைக்குள் ஓட்டக் கூடியதாக நிறுவனத்தின் ‘ரோபோடாக்சி’ வாகனம் அமைந்திருக்கும் என்றார்.

இந்நிலையில் நான்காம் நிலை தொழில்நுட்பத்தை அடைவதற்கும் சில நிபந்தனைகள் உண்டு என்று குறிப்பிடப்பட்டது.

தெளிவாகக் குறிக்கப்பட்ட சாலைத் தடங்கள், ஓரளவுக்கு மிதமான வானிலை, ‘சென்சார்’ போன்ற தனித்த சாலை அமைப்புகள் போன்றவை நான்காம் தரநிலை தானியக்க வாகனம் ஓட்டுதலுக்கு தோதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

‘ஹுயுண்டே மோட்டார்’ மற்றும் ‘அப்டிவ்’ நிறுவனங்களின் கூட்டணியில் உதித்ததே ‘மோஷனல்’.

முன்தயாரிக்கப்பட்ட உள்கட்டமைப்பு ஏதுமின்றி ‘மோஷனல்’ நிறுவனத்தின் அமைப்புமுறைகள் சிறப்பாக இயங்கும் என்று திரு கார்ல் பகிர்ந்துகொண்டார்.

சிங்கப்பூரில் அதன் ரோபோடாக்சி திட்டத்தை எப்போது அமல்படுத்தும் என்று நிறுவனம் இன்னும் உறுதியாகக் கூறவில்லை.

இதற்குமுன் 2022ஆம் ஆண்டில் ‘ரோபோடாக்சி’ தொழில்நுட்பம் தயாராகிவிடும் என்று அது அறிவித்திருந்தது.

இரு நிறுவனங்களும் மார்ச் மாதத்தில் இணைந்ததை அடுத்து ‘மோஷனல்’ 25க்கும் மேற்பட்ட முழுநேர ஊழியர்களை நியமித்துள்ளதாகவும் இவ்வாண்டு இறுதிக்குள் மேலும் 30 பேர் வேலையில் அமர்த்தப்படவுள்ளதாகவும் திரு கார்ல் கூறினார்.

முன்பு ‘நட்டோனமி’ என்ற பெயரில் ‘அப்டிவ்’ நிறுவனம் இயங்கியது.

ஆனால் 2016ஆம் ஆண்டில் ‘நட்டோனமி’யின் தானியக்க கார் ஒன்று, பயோபொலிஸ் டிரைவ் பகுதியில் ஒரு லாரியுடன் மோதியது. இதுவே தானியக்க வாகனம் தொடர்பில் சிங்கப்பூரில் ஏற்பட்ட முதல் விபத்து என்று கூறப்படுகிறது. மென்பொருள் கோளாறு இவ்விபத்துக்குக் காரணம் என்று நிறுவனம் கூறியிருந்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon