சில முடிவுகளை மீட்டுக்கொண்ட நிலப் போக்குவரத்து ஆணையம்

புக்கிட் பாஞ்சாங் பேருந்துச் சேவைகளில் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள்

புக்கிட் பாஞ்சாங்கின் முக்கிய பேருந்துச் சேவைகளில் மாற்றம் செய்யத் திட்டமிட்டிருந்த நிலப் போக்குவரத்து ஆணையம், தனது முடிவுகளில் சிலவற்றைத் திரும்பப் பெற்றுக்கொண்டுள்ளது.

புக்கிட் பாஞ்சாங்கையும் நகரையும் இணைக்கும் இரு முக்கிய பேருந்துச் சேவைகளை ரத்து செய்வதாகவும் மேலும் இரு பேருந்துச் சேவைகளின் வழித்தடம் மாற்றப்பட இருப்பதாகவும் பத்து நாட்களுக்கு முன் ஆணையம் தெரிவித்தது.

இதனால் அதிருப்தி அடைந்த புக்கிட் பாஞ்சாங்வாசிகள், கூடுதல் நேரம் பயணம் செய்ய வேண்டி இருக்கும் என்றும் நேரடியாக நகரை இணைக்கும் போக்குவரத்து வசதி இல்லாமல் போகும் என்றும் கவலை தெரிவித்தனர்.

அத்துடன், 5,000க்கும் மேற்பட்டோர் கையெழுத்துடன் மூன்று புகார் மனுக்களும் அளிக்கப்பட்டன.

இதையடுத்து, உரிய பங்காளிகளுடன் கடந்த ஒரு வார காலமாக பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதைத் தொடர்ந்து, புக்கிட் பாஞ்சாங் குடியிருப்பாளர்கள் முன்வைத்த கவலைகளைப் போக்கும் விதமாக இப்போதைய பேருந்துச் சேவைகளில் மாற்றம் செய்யப்படும் என ஆணையம் கூறியிருக்கிறது.

கடந்த 2015ஆம் ஆண்டு டௌன்டவுன் ரயில் பாதை திறக்கப்பட்டதில் இருந்து பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதாகவும் அதற்கு இணையாக பேருந்துச் சேவைகளையும் வழங்கி வருவது நிதி சார்ந்து விவேகமானதாக இராது என்றும் ஆணையம் தெரிவித்தது.

ஆனால், டௌன்டவுன் பாதை ஏற்புடைய மாற்றாக இல்லை என்றும் அருகிலுள்ள எம்ஆர்டி நிலையத்திற்குச் செல்ல சிறிது தூரம் நடக்க வேண்டி அல்லது மாற்றுச் சேவைகளைப் பயன்படுத்த வேண்டி உள்ளது என்றும் குடியிருப்பாளர்கள் கூறினர்.

இதனைத் தொடர்ந்து, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட்டும் எம்.பி.க்கள் சிலரும் முன்வந்து பேச, ஆணையம் சற்று இறங்கி வந்தது.

பேருந்துச் சேவை எண் 700 ரத்து செய்யப்பட்டாலும் உச்ச நேரத்தில் பெட்டிர் சாலையில் இருந்து நேரடியாக நகருக்குச் செல்ல ஏதுவாக, இப்போதைக்கு உச்ச நேர விரைவுச் சேவையாக இருக்கும் ‘971இ’ பேருந்துச் சேவை, ‘971’ என உச்ச நேர சாதாரண சேவையாக இயக்கப்படும்.

இந்தச் சேவை கூடுதல் பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்லும்; பேருந்துக் கட்டணம் 60 காசு குறைவாக இருக்கும். அத்துடன், காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை, மாலை 6.05 மணி முதல் இரவு 7.35 மணி வரை என அதன் சேவை நேரமும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

உச்ச நேரம் தவிர்த்த மற்ற வேளைகளில் பயணிகள் 973 பேருந்துச் சேவையைப் பயன்படுத்தலாம்.

புக்கிட் பாஞ்சாங்கையும் ஆர்ச்சர்ட் சாலையையும் இணைக்கும் பேருந்துச் சேவை 972 தொடர்பில் அறிவிக்கப்பட்ட மாற்றம் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆயினும், அச்சேவையில் சில பேருந்துகள் 972எம் என மாற்றம் பெற்று, ஸ்காட்ஸ் சாலைக்கும் நியூட்டன் எம்ஆர்டி நிலையத்திற்கும் செல்லும்.

மேலும், 972, 171, 700 ஆகிய மூன்று பேருந்துச் சேவைகளில் நாளை மறுநாள் முதல் மாற்றம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அது இம்மாதம் 30ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.

ஆணையம் முதலில் எடுத்த முடிவைக் கடுமையாக விமர்சித்த புக்கிட் பாஞ்சாங் எம்.பி. லியாங் எங் ஹுவா, இந்த விவகாரத்தில் இணக்கமான முடிவை எட்டுவது எளிதாக இருக்கவில்லை என்றார்.

பொது நிதியை விவேகமாகச் செலவழிக்க வேண்டும் என்பதற்காகவே பேருந்துச் சேவைகளில் மாற்றங்கள் செய்ய முன்னதாகத் திட்டமிடப்பட்டது என்று திரு சீ ஹொங் டாட் குறிப்பிட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon