நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் தொடர்ந்து ஆதரவளிப்போம்: துணைப் பிரதமர் ஹெங் உறுதி

பொருளியல் மந்தநிலை மேலும் மோசமடைந்து வரும் நிலையிலும் வேலை ஆதரவுத் திட்டம் முடிவுக்கு வரும் நிலையிலும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் தொடர்ந்து உதவி செய்யும் என்று வர்த்தக, தொழிற்சங்க தலைவர்களிடம் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் உறுதியளித்துள்ளார்.

பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் நிதியமைச்சருமான திரு ஹெங், பொருளியல் நிலவரத்துக்கு ஏற்ற வகையில் இந்தத் திட்டங்களை ஆய்வுசெய்ய அரசாங்க அமைப்புகளுடன் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.

அரசாங்க ஆதரவுத் திட்டங்கள் நிறுத்தப்படுவதற்குப் பதிலாக படிப்படியாக குறைக்கப்படும் என்று கடந்த செவ்வாய்க்கிழமையன்று பொருளியல் தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியீட்டின்போது கூறப்பட்டது.

இந்நிலையில், துணைப் பிரதமர் ஹெங் மேற்கண்ட கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

சிங்கப்பூர் பொருளியல் இந்த ஆண்டின் முற்பாதியில் 6.7% சுருங்கியது. அத்துடன், இவ்வாண்டில் நாட்டின் பொருளியல் 5 விழுக்காட்டில் இருந்து 7 விழுக்காடு வரை வீழ்ச்சி காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தகைய சூழலில், அரசாங்க ஆதரவுத் திட்டங்களின் செயல்பாடு குறித்து கடந்த இரு நாட்களாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ, வர்த்தக துணை அமைச்சர் லோ யென் லிங், தொழிற்சங்கத் தலைவர் இங் சீ மெங் ஆகியோருடன் கலந்துரையாடியதாக தமது ஃபேஸ்புக் பக்கம் வழியாக திரு ஹெங் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.

உள்ளூர் ஊழியர்களின் மாத ஊதியத்தில் முதல் 4,600 வெள்ளியில் அரசாங்கத்தின் பங்களிப்பை உறுதிசெய்யும் வேலை ஆதரவுத் திட்டம் போன்ற உதவித் திட்டங்கள் விரைவில் முடிவுக்கு வரவுள்ளன.

“இதுபோன்ற அரசாங்கத் திட்டங்கள் கால வரம்பின்றி நீடிக்க முடியாது என்பதைக் கலந்துரையாடல்களில் பங்கேற்றவர்கள் ஒப்புக்கொண்டனர்.

“ஆயினும், வர்த்தகங்களுக்கு, ஊழியர்களுக்கான ஆதரவில் இனி வரும் மாதங்களில் எத்தகைய மாற்றம் இருக்கும் என அவர்கள் வினவினர்.

“ஊழியர்களுக்கும் நிறுவனங்களுக்கும் அரசு தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று நான் அவர்களுக்கு உறுதி கூறினேன்,” என்று துணைப் பிரதமர் விவரித்தார்.

பொருளியல் மீட்சிக்கு அதிக காலம் ஆகலாம் என்று குறிப்பிட்ட திரு ஹெங், ஊழியர் சந்தையில் கொவிட்-19 கிருமித்தொற்று பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றும் சொன்னார்.

ஆனாலும், கொரோனா நெருக்கடியிலிருந்து மீளும் வழிகளை ஆராய்ந்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் சொன்னார்.

சில நிறுவனங்கள் தற்போதைய வர்த்தகங்களைக் கைவிட்டு, தங்களுடைய வலிமைக்கு ஏற்ற வகையில் புதிய துறைகளில் கால்பதித்துள்ளன என்றும் பல நிறுவனங்கள் மின்னிலக்கத் திட்டங்களை விரிவுபடுத்தி இணைய வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

முத்தரப்புப் பங்காளித்துவ உறவுகளைப் பயன்படுத்தி சிங்கப்பூரர்கள் புதுத் திறன்களைப் பெறவும் கொரோனா கிருமித்தொற்றுக்குப் பிந்திய உலகத்துக்கு அவர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்வது குறித்தும் பல யோசனைகள் பரிசீலிக்கப்பட்டன என்று திரு ஹெங் குறிப்பிட்டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon