கட்டுமான நிறுவனங்களுக்கு உதவ இரு மையங்கள்

மீண்டும் கட்டுமானப் பணிகளைத் தொடங்க எண்ணும் நிறுவனங்கள் உதவி தேவைப்படுமானால் அவை இரண்டு மையங்களை அணுகலாம். அவ்விரண்டு உதவி மையங்களையும் கட்டட, கட்டுமான ஆணையம் அமைத்துள்ளது.

கட்டட, கட்டுமான ஆணைய அலுவலக இடமான பிராடல் சாலையில் ஒரு மையமும் மற்றொன்று ஜூரோங் ஈஸ்ட்டிலும் அமைந்துள்ளன. இவை வார நாட்களில் காலை 8.30 மணியிலிருந்து பிற்பகல் 12.30 மணிவரையிலும் பின்னர் பிற்பகல் 1.30 மணியிலிருந்து 5.00 மணிவரையிலும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை இன்று, கஸ்கடன் ரிசர்வ் கட்டுமான தளத்தைப் பார்வையிட்ட பின்னர் தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தமது ஃபேஸ்புக் பதவில் அறிவித்தார்.

அப்பொழுது பேசிய அமைச்சர் டிபிஎஸ் கட்டுமான நிறுவனம் தனது பணிகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கப்பட்டதற்கு காரணம் அதன் கவனமான திட்டமிடல், நிர்வாகம் ஆகியவையே என்று விளக்கினார். 

டிபிஎஸ் நிறுவனத்தின்கீழ் ஐந்து துணை ஒப்பந்ததாரர்களின் ஊழியர்கள் வேறு வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கும் நிலையில், வெவ்வேறு குழுக்களாக இயங்கும் பணியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

இதில் பல்வேறு பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பது ஒருபுறமிருக்க, கட்டுமானத் தளத்தை பல்வேறு வேலையிடங்களாக பிரித்து வேலை தொடங்கியதிலிருந்து முடியும்வரை ஊழியர்களை தனித்தனி குழுக்களாகப் பிரித்து வைத்திருப்பது, அவர்களுக்கு வெவ்வேறு வேலை நேரங்களை ஒதுக்குவது போன்றவை அடங்கும் என்றும் தெரிவித்தார்.

அத்துடன், கட்டுமானத் தளத்தில் ஊழியர்களுக்கு என தற்காலிக தங்குமிடங்கள், தனித்திருக்க அறை, நோய் சிகிச்சை அறை போன்றவையும் இருக்கும் என்று அவர் கூறினார்.

“எனினும் கடந்த சில மாதங்களாக நாம் சந்தித்துள்ள சவால்கள் இதுவரை காணாதவை. 

இதனால், கட்டுமானத் தளத்தில் உள்ள அனைவருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் மிகவும் சிரமமான காலகட்டமாக அது விளங்கியது என்பதையும் நாங்கள் அறிவோம்,” என்று அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெளிவுபடுத்தினார்.

இந்த இரண்டு உதவி மையங்களையும் திறந்ததன் மூலம் கட்டட, கட்டுமான ஆணையம் இந்தத் தொழில்துறையுடன் இணைந்து அணுக்கமாகப் பணியாற்றி வருவதற்கு சான்று என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த உதவி மையங்களைத் தொடர்பு கொள்ள விரும்பும் நிறுவனங்கள் 1800-3425-222 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம்.  அல்லது இணையம் வழியும் தொடர்பு கொள்ளலாம்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon