1-அல்டிடியூட் கட்டடத்தின் உச்சியில் உள்ள மதுக்கூடத்தில் இருந்து கடந்த ஆண்டு நான்கு மீட்டர் உயரம் கீழே விழுந்த பகுதிநேர பாதுகாவல் அதிகாரியின் மரணம், பாதுகாப்பு தரநிலைகள் முறையாகக் கடைப்பிடிக்கப் பட்டிருந்தால் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்று மரண விசாரணை அதிகாரி நேற்று தெரிவித்தார்.
ஒன் ராஃபிள்ஸ் பிளேஸ் எனும் முகவரியில் உள்ள அந்த மதுக்கூடத்தில் பாதுகாப்பு விதிமீறல்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று திரு ஷோன் டுங் மன் ஹோனின் (இடது படம்) மரணம் குறித்து விசாரித்த மரண விசாரணை அதிகாரி திருவாட்டி கமலா பொன்னம்பலம் கூறினார். மரண விசாரணை முடிவின்போது நீதிமன்றத்தில் இருந்த திரு டுங்கின் குடும்பத்தைப் பிரதிநிதிக்கும் வழக்கறிஞர் வோங் சூ சி, அந்த மதுக்கூடத்தின் மீது திரு டுங்கின் குடும்பம் வழக்கு தொடுக்கப் போவதாகத் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி திரு டுங் விழுந்த போது, இரண்டாம் மாடியில் இருந்த அந்தக் குழியைச் சுற்றி (வலது படம்) தடுப்புகளும் எச்சரிக்கை அறிவிப்புகளும் இருந்தன என்றும் தடுப்புகளை யாராவது நகர்த்தியிருக் கலாம் என்றும் திருவாட்டி கமலா கூறினார். சம்பவத்தன்று அதிகாலை 1.30 மணிக்கு அடையாளம் தெரியாத இருவர் அந்தக் குழியை நோக்கி செல்வதைப் பார்த்த திரு டுங், அபாயம் குறித்து அவர்களை எச்சரிக்க ஓடினார். ஆனால், துரதிருஷ்டவசமாக டுங்கே அந்தக் குழிக்குள் விழுந்து விட்டார். பின்னர் அங்கு வந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் மருத்துவ அதிகாரிகள் டுங்கின் மரணத்தை உறுதிப்படுத்தினர்.

