ஆணையம்: தொழில்நுட்பக் கெடுபிடிகள் ஒவ்வொருவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்

2 mins read
6f7483da-71b6-4358-b48c-e0fc4a8eb39b
சிங்கப்பூர் நாணய ஆணையம். படம்: எஸ்டி, குவா சீ சியோங் -

பொருளியல் வல்லரசுகளுக்கு இடையில் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பப் பதற்றங்கள் அதிகரிப்பது குறித்து சிங்கப்பூர் நாணய ஆணையம் கவலை அடைந்துள்ளது.

வல்லரசுகளுக்கு இடையிலான பிரச்சினைகள் முற்றி தொழில்நுட்பங்களுக்கு நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்ற சூழ்நிலை வந்தால் அதனால் ஒவ்வொருவருக்கும் இழப்பு ஏற்படும் என்று அந்த ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் தெரிவித்தார்.

இணையம் வழி நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அவர், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் உறவு கசந்து வருகிறது என்றும் அது பல துறைகளிலும் எதிரொலிக்கிறது என்றும் கூறினார்.

"இரு தரப்பும் போட்டி போட்டுக்கொண்டு தூதரகங்களை மூடுகின்றன. ஹாங்காங், தைவான் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் அரசதந்திர பிரச்சினை கூடி வருகிறது.

"டிக் டாக் செயலி நிறுவனமான 'பைட்டான்ஸ்' உள்ளிட்ட சீன தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

"இவை எல்லாம் புதிய கெடுபிடிப் போரைக் கிளப்பிவிட்டுள்ளன. இதன் காரணமாக உலக வர்த்தகமும் பொருளியலும் இன்னும் ஆழமான மந்தத்தில் சிக்கிவிடக்கூடும்," என்றாரவர்.

"வர்த்தகப் பிணக்குகள் கவலை தருகின்றன என்றாலும் இவற்றை சமாளிப்பது ஏதோ சில வழிகளில் சுலபமாக இருக்கக்கூடும்.

"ஆனால் தொழில்நுட்பம் என்று வரும்போது உற்பத்திப் பொருட்களும் சேவைகளும் தொழில்நுட்பங்களையே அடிப்படையாகக் கொண்டுள்ளன.

"கணினிச் சில்லுகள் ஓரிடத்தில் இருந்து வருகின்றன. மென்பொருட்கள் வேறு இடத்தில் இருந்து வருகின்றன. எது எங்கிருந்து வருகிறது என்பதை எப்படி பிரித்துப் பார்ப்பது?," என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஆகையால் வர்த்தகம் போல் அல்லாது தொழில்நுட்பம் என்பது நாம் செய்யும் காரியங்களில் இரண்டறக் கலந்துள்ளது என்று திரு மேனன் குறிப்பிட்டார்.

தொழில்நுட்பங்களைப் பொறுத்தவரை நிபந்தனைகளும் தடைகளும் இடம்பெற்றால் புத்தாக்கக் கண்டுபிடிப்பாளர்கள் சிலர் அதைச் சவாலாக ஏற்றுக்கொண்டு செயல்படும் நிலை வரலாம் என்றும் நிர்வாக இயக்குநர் ரவி மேனன் தெரிவித்தார்.