அப்துல் கலாம் ஐந்தாவது ஆண்டு நினைவு தினம்

1 mins read
debd9fad-f463-4c0f-a1e1-2ec943991751
-

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான மறைந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினமான ஜூலை 27ஆம் தேதியை சிங்கப்பூர் அப்துல் கலாம் இலட்சியக் கழகம் அனுசரித்தது. மூத்தோர், வசதி குறைந்தோர், கவனிப்பாரற்ற நோயாளிகள் போன்றோரைப் பராமரிக்கும் ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தில் கலாம் அமைப்பினர்களான திரு ஜோதி மாணிக்கவாசகம், திரு ஜான் ராமமூர்த்தி ஆகியோர் நேரில் சென்றனர்.

2002ஆம் ஆண்டு இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரான பிறகு, நாடு முழுவதும் பயணம் செய்து தனது பேச்சாற்றால் மூலம் கோடிக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவர்களைச் சந்தித்து டாக்டர் அப்துல் கலாம் உரையாடினார். டாக்டர் கலாமின் உரைகளால் ஈர்க்கப்பட்டு அவரை தங்களின் வழிகாட்டியாக இளையர்கள் ஏற்றுக்கொண்டனர். அணு ஆயுதங்கள், ஏவுகணைகள், எறிபடைகளைத் தயாரித்ததைவிட மாற்றுத் திறனாளிகளுக்காக எடை குறைந்த செயற்கைக் கால்கள், இதய நோயாளிகளுக்கான 'ஸ்டெண்ட்' கருவியையும் கண்டுபிடிக்க உதவியதைத்தான் டாக்டர் கலாம் தனக்குப் பிடித்தமான கண்டுபிடிப்புகள் என தனது சுயசரிதையில் குறிப்பிட்டிருந்தார்.

சிங்கப்பூர் அப்துல் கலாம் இலட்சியக் கழகத்தின் செயற்குழு கூட்டம், அதன் தலைவர் கே.கேசவபாணி தலைமையில் ஜூலை 27ஆம் தேதி நடந்தது. அப்போது டாக்டர் கலாமுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. செய்தி: சிங்கப்பூர் அப்துல் கலாம் இலட்சியக் கழகம்