குடியிருப்பு பகுதிகள் மற்றும் அலுவலகங்களுக்கு அருகே பணியாற்றும் ஊழியர்களால் பிறருக்கு அபாயமில்லை. இதனை 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' நாளிதழ், வாசகர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்தபோது கூறியது.
வெளிநாட்டு ஊழியர்கள் தங்களது விடுதிகளைவிட்டு வேலையிடங்களுக்குச் செல்வதற்கு முன்னர் அவர்கள் ஏராளமான தகுதி நிலைகளை நிறைவேற்றவேண்டும். அவர்கள் தங்கும் விடுதி கிருமித்தொற்று இல்லாமல் பாதுகாப்பாக உள்ளது என்பது உறுதி செய்யப்பட்ட பிறகுதான் அவர்கள் தங்களது விடுதிகளைவிட்டுச் செல்லமுடியும்.
வெவ்வேறு வேலையிடங்களைச் சேர்ந்த ஊழியர்கள் ஒருவரோடு ஒருவர் நேரடியாகத் தொடர்பு கொள்வதை குறைக்கும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
'டிரேஸ்டுகெதர்' உள்ளிட்ட மூன்று செயலிகளையும் அவர்கள் தங்களது திறன்பேசிகளில் வைத்திருக்கவேண்டும். அத்துடன் அவர்கள் நாள்தோறும் தங்களது வெப்பநிலையை அளவை தெரிவிக்கவேண்டும். உடல்நிலை சரியில்லாதவர்கள் வேலையிடத்திற்குச் செல்ல அணுமதி இல்லை.
மேலும், அதிக அபாயகரமான சூழலிலுள்ள ஊழியர்கள் 14 நாட்களுக்கு ஒருமுறை சோதனை செய்யப்படுவர். ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் இருப்பவர்கள், கட்டுமான இடங்களில் வேலை செய்பவர்கள், கடல் துறையில் வேலை செய்பவர் இந்தப் பிரிவினரில் அடங்குவர்.

