பள்ளிகள் தொடர்ந்து இயங்க நடவடிக்கை

பள்ளிகள் தொடர்ந்து இயங்க நடவடிக்கை

2 mins read
be02c8ef-02fa-4e75-b88d-8c4a1d8d9d28
-

ஏற்றத்தாழ்வில்லாச் சமூகத்தை அமைக்கும் கருவியாக விளங்கும் கல்வி மீது தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். அத்துடன், கொவிட்-19 நோய்ப் பரவல் நீடித்தாலும் பள்ளிகள் தொடர்ந்து இயங்குவது உறுதிசெய்யப்படும் என்று அமைச்சர் வோங் கூறியிருக்கிறார்.

"ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தை அமைப்பதற்கான கருவியாக கல்வி நீடிப்பதை உறுதிசெய்ய நானும் என் குழுவினரும் முன்னுரிமை அளித்து வருகிறோம். பள்ளிகளுக்கு நாங்கள் வழங்கி வரும் வளங்களும் இந்த முக்கியமான அடிப்படைப் பண்பைப் பிரதிபலிப்பதாகத் திகழ்கின்றன," என்று திரு வோங் சொன்னார். அதே நேரத்தில், மாணவர்கள் வகுப்பறைகளுக்கு வெளியே இடம்பெறும் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதிப்பது எவ்வாறு, கொரோனா நோய்ப் பரவல் தொடரும் பட்சத்தில் தேர்வுகளை எப்படி நடத்துவது, எதிர்பாராது கிருமித்தொற்று அலைகள் தோன்றினால் அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பன போன்ற பிரச்சினைகள் குறித்து கல்வி அமைச்சு சிந்திக்கும்படியான ஒரு நிலையை கொரோனா பரவல் ஏற்படுத்தி இருக்கிறது.

"என்னென்ன சரிக்கட்டல்களைச் செய்ய வேண்டும் என்பது குறித்து யோசித்து வருகிறோம்," என்றார் அமைச்சர் வோங். "இன்னும் ஓராண்டு அல்லது அதற்கும் அதிகமான காலத்திற்கு கொரோனா பிரச்சினை நீடிக்கும் பட்சத்தில், நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். அதே வேளையில், கற்றல் நடவடிக்கைகள் தடைபடக்கூடாது என்பதையும் உறுதிசெய்ய வேண்டும்," என்று திரு வோங் கூறினார்.

வகுப்புகள், கல்வி சார்ந்த அம்சங்களுடன் இணைப்பாட நடவடிக்கைகளும் கற்றல் அனுபவத்தில் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

மார்சிலிங் உயர்நிலைப் பள்ளிக்கு நேற்று வருகை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வோங் இவ்வாறு பேசினார். கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றபின் அவர் வருகைபுரிந்த மூன்றாவது பள்ளி இது.

மார்சிலிங் உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள செங்குத்தான காய்கறித் தோட்டத்தையும் திரு வோங் பார்வையிட்டார். உணவு உற்பத்தியில் நீடித்த நிலைத்தன்மை போன்ற சுற்றுச் சூழல் பிரச்சினைகள் குறித்து மாணவர்களுக்குக் கற்பிக்கும் பயன்முறைக் கற்றல் நடவடிக்கைகளுக்கு அத்தோட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அத்தோட்டத்தில் கங்கோங் கீரை போன்ற தாவரங்களை மாணவர்கள் வளர்த்து, அறுவடை செய்வர். மாணவர்கள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகளை உள்ளூர் அறக்கட்டளைகளுக்குத் தானமாக வழங்குவர்.

அதுபோக மிஞ்சி இருக்கும் காய்கறிகளை அவர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். ஒவ்வொரு மாணவரின் சிறந்த திறனையும் வெளிப்படுத்தும் வகையில் கல்விக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

"ஒவ்வொரு மாணவரும் இன்னொரு மாணவரிடம் இருந்து வேறுபட்டவர் என உணர்ந்திருக்கிறோம். அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான திறன் படைத்தவர்கள், ஆர்வம் கொண்டவர்கள். ஆகையால், அவர்கள் தங்களது பலங்களை அடையாளம் கண்டு, முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி இலக்கை அடையும் வகையில் அவர்களை ஈடுபடுத்த விரும்புகி றோம்," என்றார் அமைச்சர் வோங்