ஒன்றிணைந்து பங்காளிகளாகச் செயல்படுவதன் மூலம் அரசாங்கமும் சிங்கப்பூரர்களும் கொவிட்-19 கொள்ளைநோயில் இருந்து வலுவுடன் மீண்டெழுந்து நாடு சிறப்படைவதில் அதிகம் சாதிக்க முடியும் என்று டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் தெரிவித்து உள்ளார்.
பிரதமர் அலுவலக அமைச்சரும் கல்வி, வெளியுறவு இரண்டாம் அமைச்சருமான டாக்டர் மாலிக்கி, மெய்நிகர் கலந்துரையாடலின்போது இதனைக் குறிப்பிட்டார்.
ஒன்றிணைந்து வலுவுடன் மீண்டெழும் சிங்கப்பூர் என்னும் பொருள்படும் தலைப்பில் நேற்று அந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது. ஜூன் மாதம் தொடங்கி அக்டோபர் வரையில் ஒரு தொடராக இந்தப் பொது கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டு வருகிறது. திட்டமிடப்பட்ட 12 கலந்துரையாடல்களில் நேற்று நடைபெற்றது ஐந்தாவது நிகழ்வு.
'ஒன்றிணைந்த சிங்கப்பூர்' என்னும் விரிவான பிரசார இயக்கத்தின் ஒரு பகுதியாக கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. கொள்கைத் தீர்வுகளை இணைந்து உருவாக்க அரசாங்கமும் சிங்கப்பூரர்களும் பங்காளித்துவம் கொண்டு கருத்துப் பரிமாற்றம் செய்வதே 'ஒன்றிணைந்த சிங்கப்பூர்' பிரசாரம்.
ஒவ்வொரு கலந்துரையாடலும் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கும். பலதரப்பட்ட பின்னணியைக் கொண்ட 40 முதல் 50 வரையிலான வர்கள் இதில் பங்கேற்று கருத்துகளைத் தெரிவிப்பர். அரசாங்கம் சார்பில் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வர்.
தொடக்க உரை நிகழ்த்திய டாக்டர் மாலிக்கி, சிங்கப்பூரர்கள் இதுவரை கற்றுக்கொண்டதையும் வலுவுடன் மீண்டெழும் சிங்கப்பூர் எப்படி இருக்கவேண்டும் என அவர்கள் மீண்டும் கற்பனை செய்வதையும் பிரதிபலிக்கும் வாய்ப்பை கொவிட்-19 நெருக்கடி ஏற்படுத்தித் தந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
நாட்டு மக்கள் அனைவரின் எல்லாவித ஆற்றல்களையும் ஆலோ சனைகளையும் ஒன்றுதிரட்டக் கூடிய முயற்சி இது என்றார் அவர். இருப்பினும் ஆலோசனைகளைப் பொறுத்தமட்டில் அரசாங்கம் மட்டும் தனித்து இயங்காது என்று அவர் குறிப்பிட்டார்.
"இயன்றவரை எத்தனை சிங்கப்பூரர்களின் கருத்தைத் திரட்ட முடியுமோ அத்தனையையும் திரட்ட முயல்வோம். சிங்கப்பூரை முன்னோக்கிச் செலுத்த எல்லாத் தரப்பினரும் தெரிவிக்கும் சாத்தியமுள்ள யோசனைகளுக்கும் தீர்வுகளுக்கும் செவிசாய்ப்போம்," என்று டாக்டர் மாலிக்கி தெரிவித்தார்.
சிங்கப்பூரை மீட்ெடடுத்து உருவாக்குவதற்கான மீள்திறன் குறித்தே நேற்றைய கலந்துரையாடலில் பலரும் கருத்து தெரிவித்தனர். ஆட்குறைப்பு அதிகரிப்பது குறித்து கவலை தெரிவித்த சிலர், வெளிநாட்டு ஊழியர்களைச் சார்ந்திருக்கும் போக்கைக் குறைக்க வேண்டும் என்றனர்.
கலந்துரையாடலுக்குப் பின்னர் இணையம் வழியாக நடைபெற்ற பேட்டியில் பங்கேற்ற பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, சிங்கப்பூரர்கள் தங்களது வாழ்க்கைக்கான முன்னுரிமைகளை மீண்டும் ஆராயும் நிலையையும் பெரும் அனுசரிப்புகளை மேற்கொள்ள வேண்டிய சூழலையும் கொள்ளைநோய் ஏற்படுத்தி இருப்பதாகக் குறிப்பிட்டார்.
பங்கேற்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டிய அவர், கிருமித் தொற்றின் தாக்கம் சின்னஞ்சிறியது அல்ல என்றார். மக்கள் தாங்களாகவும் அரசாங்கத்துடன் இணைந்தும் செய்ய வேண்டியவை நிறைய இருப்பதாகவும் குமாரி இந்திராணி கூறினார்.

