அதிகரிக்கும் சுமை; திணறும் உடற்பயிற்சிக் கூடங்கள்

1 mins read
19101346-1da8-4849-a677-e3d99472efe5
வாரத்தில் ஏழு நாட்களும் 24 மணி நேரம் இயங்கும் 'ஜிம் பாட்', ஏழு இடங்களில் உள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சுத்தம் செய்யும் பணிகள் அதிகரித்துள்ளன. ஊழியர்களுக்கான செலவுகள் கூடியுள்ளன. இதனால் செயல்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ள சில 24 மணி நேர உடற்பயிற்சிக் கூடங்கள் திணறுகின்றன.

வெவ்வேறு வேலை நேரங்களைக் கொண்ட மக்களுக்கு முடிந்தவரை தோதாக இருக்க வேண்டும் என்பதற்காக 2013ஆம் ஆண்டில் தனது முதலாவது 24 மணி நேரக் கிளையை பீஷான் வட்டாரத்தில் திறந்தது 'ஜிம்பாக்ஸ்' நிறுவனம். ஆனால் தற்போதைய நிலையால் அதன் ஆறு கிளைகளிலும் 24 மணி நேரச் சேவையை நிறுத்திவிட்டது.

"கொவிட்-19 காலகட்டத்தில் தங்களின் செலவுகளைப் பலர் குறைத்துகொள்கிறார்கள். இதனால் வருவாயும் சரிந்துவிட்டது. கூடுதல் சுத்தம் செய்யும் பணிகளுக்காக நாங்கள் மேலும் $10,000 செலவு செய்கிறோம்," என்றார் நிறுவனத்தைச் சேர்ந்த திரு லீ வெய் ஹாவ். 24 மணி நேரச் சேவை வழங்குவதில் பிரபலமான 'எனிடைம் ஃபிட்னஸ்' உடற்பயிற்சிக் கூடத்திற்கும் அதே நிலை. அதன் 65 கிளைகளில் தற்போது 12 மட்டுமே 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன.

கொவிட்-19 பாதுகாப்பு விதிமுறைகளைப் பயனீட்டாளர்கள் மீறாமல் இருப்பதை உறுதி செய்ய, கூடங்களில் எந்நேரமும் பணியாட்களும் அமர்த்தப்பட வேண்டியுள்ளதால் செலவுகளும் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், ஓரிருவர் மட்டுமே பயன்படுத்தக்கூடிய 'ஜிம் பாட்' எனப்படும் ஆளில்லா உடற்பயிற்சிக் கூடம் பிரபலமாகி வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே பயனீட்டாளர்கள் கூடத்தைப் பயன்படுத்த முன்பதிவு செய்துவிடுகிறார்கள் என்று கூறப்பட்டது. ஒரு நாளில் 14 முதல் 16 மணி நேரம் கூடம் பயன்படுத்தப்படுவதாகவும் இதன் நிறுவனர் டேமியன் சாவ் கூறினார்.