தெமாசெக் முதலீட்டு நிறுவனத்தில் பணிபுரியும் இந்திய நாட்டு ஊழியர்களைக் குறிவைத்துள்ள ஃபேஸ்புக் பதிவுகளுக்கு அந்நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்தப் பதிவுகளை இனவாதமிக்கவை, சமூகத்தினரிடையே பிளவை ஏற்படுத்தக்கூடியவை, பொய்யானவை என்று தெமாசெக் வர்ணித்துள்ளது.
தனது வேலை நியமனக் கொள்கைகளை அது தற்காத்து பேசியது. அத்துடன் சமூக ஊடகத்தில் கூடுதல் நாகரிகம் தேவை என்று அது கூறியது.
கடந்த ஒரு வாரமாக தெமாசெக் நிறுவனத்தில் பணிபுரியும் இந்திய நாட்டு ஊழியர்களின் LinkedIn கணக்குகளை மேற்கோள்காட்டும் பதிவுகள் சமூக ஊடகத்தில் வலம் வருகின்றன.
சிங்கப்பூரர்களை வேலையில் அமர்த்தாமல் தெமாசெக் நிறுவனம் ஏன் வெளிநாட்டவர்களுக்கு வேலை கொடுக்கிறது என்ற கேள்வியை அந்தப் பதிவுகள் எழுப்பின.
இந்த விவகாரம் குறித்து டிபிஎஸ் வங்கியும் ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கியும் சமூக ஊடகம் வழி கடுமையாக விமர்சித்துள்ளன.
தமது இந்திய நாட்டு ஊழியர்
களைக் குறிவைக்கும் ஃபேஸ்புக் பதிவுகளுக்கு எதிராக தெமாசெக் அறிக்கை வெளியிட்டுள்ளது.
"எங்கள் இந்திய நாட்டு ஊழியர்களைக் குறிவைத்து சமூகத்தினரிடையே பிளவை ஏற்படுத்தக்கூடிய, இனவாதமிக்க பதிவுகள் அண்மையில் சமூக ஊடகத்தில் வலம் வந்த வண்ணம் உள்ளன. எங்கள் மீது பொய்க் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இது எங்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூர் சமூக ஊடகத்தில் வெறுப்பைத் தூண்டும் இத்தகைய பதிவுகள் வலம் வருவதைக் கண்டு தெமாசெக் நிறுவனத்தில் பணிபுரியும் சிங்கப்பூரர்களும் வெட்கம் அடைந்துள்ளனர்.
வேலை நியமனத்தில் பாகுபாடு காட்டுவது தொடர்பாக 47 நிறுவனங்களை மனிதவள அமைச்சு அதன் கண்காணிப்புப் பட்டியலில் இம்மாதத் தொடக்கத்தில் சேர்த்தது. அவற்றில் 30 நிறுவனங்கள் நிதி மற்றும் நிபுணத்துவச் சேவைத் துறைகளைச் சேர்ந்தவை.
கொரோனா கிருமித்தொற்று பொருளியலை வெகுவாகப் பாதித்துள்ளது. இவ்வேளையில் வேலை குறித்து நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூரர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் வேலை தொடர்பாக இருக்கும் போட்டி குறித்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலின்போது இந்த விவகாரம் குறித்து அரசியல் கட்சிகளிடையே காரசார விவாதங்கள் நடந்தன. தனது தலைமையகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 90 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள் என்று தெமாசெக் நிறுவனம் கூறியது.
உலகளாவிய நிலையில் அதன் ஊழியர்களில் 60 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள் என்றும் 40 விழுக்காட்டினர் வெளிநாட்டவர்கள் என்றும் தெமாசெக் நிறுவனம் தெரிவித்தது.
அந்த வெளிநாட்டவர்களில் கிட்டத்தட்ட 10 விழுக்காட்டினர் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் என்று அது கூறியது.
தெமாசெக் நிறுவனத்தில் பணிபுரியும் வெளிநாட்டவர்களில் பெரும்பாலானோர் சீனா, அமெரிக்கா, இந்தியா, பிரிட்டன், மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது சிங்கப்பூர் ஊழியர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்படும் என்று கூறிய தெமாசெக், அதே வேளையில் வெளிநாடுகளிலிருந்து வரும் திறமைசாலிகளையும் வேலைக்கு எடுக்க வேண்டும் என்று கூறியது. அவ்வாறு செய்யாமல் போனால் அது முட்டாள்தனமாகும் என்று அது கூறியது.
வெளிநாட்டவருக்கு எதிரான இத்தகைய போக்கு சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்தும் என்று தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"சிங்கப்பூரர்களுக்கு வேலை, நல்ல வருமானம் இருப்பதுதான் எங்களுக்கு முக்கியம். ஆனால் அதற்காக அநாகரிகமாக நடந்துகொள்ளக்கூடாது.
"வெளிநாட்டவர்களை நாம் ஏற்றுக்கொள்ளும் அதே நேரத்தில் அவர்களிடம் பயிற்சி பெற்று அவர்களிடமிருந்து தேவையான திறன்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்," என்று அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்தார்.

