விதிகளை மீறிய 7 வாடிக்கையாளர்களால் போலிசாரை அழைத்த ஹாலந்து வில்லேஜ் உணவகம்

விதிகளை மீறிய 7 வாடிக்கையாளர்களால் போலிசாரை அழைத்த ஹாலந்து வில்லேஜ் உணவகம்

2 mins read
6cef9a7e-ca08-4f8e-9742-42c56acfe396
-

சிங்கப்பூர் உணவகங்களில் உண்ணும் வாடிக்கையாளர்கள், பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்பது அல்லது பெரிய குழுக்களாக மேசைகளுக்கு இடையே தொடர்புகொள்வது போன்று விதிமுறைகளை மீறும்போது அது உணவகங்களுக்கு பணிநிறுத்தமோ பெரிய தொகை அபராதமோ விதிக்க நேரிடலாம்.

சவுத் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்துள்ள 'வாட்டோஸ் ஆர்பர்ன் தாக்கோஸ்' (Vatos Urban Tacos), ஹாலந்து வில்லேஜ் பகுதியில் அமைந்துள்ள 'வாட்டோஸ் கண்டினா' (Vatos Cantina) என்ற உணவகங்களின் உரிமையாளரான திரு சிட் கிம் இது குறித்து ஆகஸ்ட் 15ஆம் தேதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமையன்று இரவு நேரம் இரு மேசைகளில் அமர்ந்திருந்த ஐந்து வாடிக்கையாளர்கள் விதிமுறைகளை மீறி பழக்கம் கொண்டதற்காக பாதுகாப்பு இடைவெளி அதிகாரி ஒருவர் உணவகத்தை கண்டித்தார் என்பதை சுட்டினார் திரு சிட்.

கடை ஊழியர்கள் மூன்று முதல் நான்கு முறைகள் வாடிக்கையாளர்களிடம் அதை தவிர்க்க சொல்லியும், அவர்கள் அவ்வாறு பழகியதாக குறிப்பட்டார் அவர்.

அடுத்த நாள், சனிக்கிழமை இரவு இது போன்ற ஒரு சம்பவம் மறுபடியும் நிகழ்ந்தது. ஒரு மேசையில் நான்கு பேர், மற்றொன்றில் மூன்று பேர் விதிமுறைகளை பொருட்படுத்தாமல் பழக்கம் கொண்டனர் என்றார் சிட்.

"எனது பெண் நிர்வாகி நல்ல முறையில் அவர்களை நிறுத்தச் சொன்னார், ஆனால் அவர்கள் முற்றிலும் அவரைப் புறக்கணித்தபோது, அவர் மேலும் கண்டிப்பானார். இறுதியில், இரு மேசைகளில் அமர்ந்திருந்த அனைவரையும் கடையைவிட்டு கிளம்ப சொல்லவேண்டியிருந்தது. வாடிக்கையாளர்கள் மறுத்தனர். என் நிர்வாகி என்னை அழைத்தபோது போலிசாரை கூப்பிடுவதைத் தவிர நமக்கு வேறு வழி இல்லை என்று அவரிடம் சொன்னேன், அதையும் அவர் செய்தார்," என்று விளக்கினார் சிட்.

போலிசார் வருவதற்கு முன்னர் அந்த வாடிக்கையாளர்கள் கடையைவிட்டு கிளம்பிவிட்டனர்.

பாதுகாப்பு இடைவெளியை மீறுவது வாடிக்கையாளர்களுக்கு முக்கியமானதாக தெரியாமல் போகலாம் என்றாலும் வியாபாரங்களுக்கு அது வாழ்வா இறப்பா என்ற நிர்பந்தச் சூழல் இருக்கிறது என்பதை வலியுறுத்தினார் சிட்.

செய்தி: 'மதர்ஷிப்' செய்தி இணையப்பக்கம்