துணைப் பிரதமர் ஹெங்: ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்திற்கு உள்ளூர் மக்களை ஈர்க்க முயற்சி

துணைப் பிரதமர் ஹெங்: ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்திற்கு உள்ளூர் மக்களை ஈர்க்க முயற்சி

2 mins read
65b92ce6-628a-45b3-a36e-406b90fe94ef
-

சிங்கப்பூரின் ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்தில் சுற்றிப்பார்க்க வேண்டிய பல இடங்கள் மறைந்து கிடக்கின்றன. அவற்றை வெளிக்கொணர்ந்து பிரபலமாக்கி உள்ளூர் மக்களிடையே சுற்றுப்பயணங்களை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அவ்வட்டார நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும் துணைப் பிரதமருமான ஹெங் சுவீ கியட் நேற்று தெரிவித்தார்.

இதற்காக அரசாங்க அமைப்புகளுடன் ஈஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதியைச் சேர்ந்த அடித்தள அமைப்புகள் சேர்ந்து செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார். முன்னதாக ஈஸ்ட் கோஸ்ட் வட்டாரத்திற்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அவருடன் அதே குழுத்தொகுதியைச் சேர்ந்த மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களான பிரதமர் அலுவலக அமைச்சர் முகம்மது மாலிக்கி ஒஸ்மான், பிரதமர் அலுவலக துணை அமைச்சரும் தேசிய வளர்ச்சி துணை அமைச்சருமான டான் கியட் ஹாவ், செரில் சான், ஜெசிக்கா டான் ஆகியோரும் சென்றனர்.

இவர்களுடைய பயணம் 'East Coast Buzz' எனும் பெயரில் ஃபேஸ்புக் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதை 10,000க்கும் மேற்பட்டோர் பார்த்தனர். ஃபெங்ஷான் மூத்த குடிமக்களுக்கான நிர்வாகக் குழுவின் தலைவரான 'பிபிஎம்' விருது பெற்ற 67 வயது திருமதி சோங் லீ சின், லீனியர் கிரீன் சமூகத் தோட்டத்தில் தொண்டூழியம் புரியும் 41 வயது ஜிம்மி ஓங் சீ மெங் ஆகியோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தவர்களில் அடங்குவர்.

சாங்கி வில்லேஜில் அவர்களுடைய சுற்றுப்பயணம் முடிவடைந்தது. அங்கு பேசிய பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு ஹெங் நேரடி ஒளிபரப்பை பார்வையிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

"சமூக அக்கறையுடன் செயல்படும் குடியிருப்பாளர்களைச் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றும் அவர் கூறினார்.