இவ்வாண்டின் ஆகஸ்டு மாதத்தின் முதல் பாதியில் மட்டும் மோசடி, கள்ளப்பணத்தை நல்ல பணமாக மாற்றுவது, உரிமம் இல்லாமல் கடன் வழங்கியது உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 313 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் மின்வர்த்தக மோசடி மிரட்டலாக விளங்குகிறது என்று போலிசார் கூறியுள்ளனர்.
ஆகஸ்டு 3ஆம் தேதியிலிருந்து ஆகஸ்டு 14ஆம் தேதி வரையில் ஒன்பது நாள் மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கைகளில் 16 வயது முதல் 76 வயது வரையிலான சந்தேக நபர்கள் சிக்கினர்.
பீடோக் காவல்துறை நிலையம் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.
கைது செய்யப்பட்டவர்களில் 93 பேர் பெண்கள். இவர்களில் 29 பெண்கள் உட்பட 49 பேரிடம் சுமார் $1.24 மில்லியன் மதிப்புள்ள கள்ளப் பரிவர்த்தனை, மின்வர்த்தக மோசடி தொடர்பில் விசாரிக்கப்படுகின்றனர்.
அதிரடி சோதனையில் ஏமாற்று, நம்பிக்கை மோசடி செய்ததாக சந்தேகிக்கப்படும் 16 முதல் 56 வயது வரையிலான ஐந்து ஆண்களும் நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
கடன் மோசடி, கடன் முதலை நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் 16 முதல் 76 வயது வரையிலான 60 பெண்கள் உட்பட 116 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
பீடோக் போலிஸ் நிலையத்தின் தலைவரும் போலிஸ் படை உதவி ஆணையாளருமான ஜுலியஸ் லிம், இணைய வர்த்தக மோசடியிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் முயற்சியாக இந்தச் சோதனை நடைபெற்றது என்றார்.
மின்வர்த்தக மோசடி அதிகரித்து வருவதை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை காட்டுவதாகவும் இணைய வர்த்தகத்தில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இவ்வாண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் மின்வர்த்தக மோசடி எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 116.2 விழுக்காடு கூடியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் குறைந்தது 1.3 மில்லியன் வெள்ளி வரை பொதுமக்கள் ஏமாற்றப்பட்டு உள்ளனர்.

