கொவிட்-19 காரணமாக சிங்கப்பூரிலும் உலக அளவிலும் நடப்புக்கு வந்துள்ள பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இங்கு 20க்கும் மேற்பட்ட சுற்றுப் பயணி நினைவுப்பொருள் விற்பனைக் கடைகள் தங்கள் கதவுகளை நிரந்தரமாக மூடிவிட்டன.
அவற்றில் பல கடைகள் பல ஆண்டு காலமாக இங்கு செயல்பட்டு வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கெரோனா கிருமி ஒழிவதாகத் தெரியவில்லை. ஆகையால் வரும் மாதங்களில் தங்களுக்கும் இதே கதி ஏற்படக்கூடும் என்று இதர பல கடைகளும் கவலையில் இருப்ப தாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
சைனாடவுன், பூகிஸ் ஸ்திரீட் போன்ற சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் இடங்களில் செயல்படும் சில கடைகளுக்குப் பல நாட்களில் வாடிக்கையாளர் ஒருவர் கூட வந்ததாகத் தெரியவில்லை.
'சிங்கப்பூர் சொவினியர் சென்டர்' என்ற நிறுவனத்தை நிறுவியவர் ஜோ சென் என்பவர்.
பயணம் மறுபடியும் தொடங்குவதற்கு முன் இத்தயை கடைகள் எல்லாமே கதவை முடிவிடக்கூடிய நிலை ஏற்படும் சூழலும் இருக்கிறது என்று இவர் தெரிவித்தார்.
மேலும் உதவி எதுவும் கிடைக்கவில்லை என்றால் அடுத்த ஆறு மாதங்களில் 90% கடைகள் கதவை மூடிவிடும் என்று தான் நம்புவதாக திரு சென் மேலும் குறிப்பிட்டார்.
இத்தகைய கடைகள் சுற்றுப் பயணிகளையே நம்பி இருப்பதால் வியாபாரம் 80% சுருங்கிவிட்டது.
இருந்தாலும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்ற ஒப்பந்த நிபந்தனை காரணமாக சில கடைகள் குறைவான ஊழியர்களுடன், குறைந்த நேரம் செயல்படுகின்றன. ஒரு சில கடைகள் முகக்கவசம் போன்றவற்றை விற்கின்றன.
சிங்கப்பூருக்கு கடந்த ஜூன் மாதம் வந்த சுற்றுப்பயணிகள் வெறும் 2,000 பேர்தான். இந்த அளவு, சென்ற ஆண்டு இதே மாதத்தில் 1.6 மில்லியன் பேராக இருந்தது. இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் வந்த பயணிகள் முறையே 750 மற்றும் 880 பேர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

