கொவிட்-19 கிருமித்தொற்று தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக காலம் நீடித்து வருவதாக 10ல் ஏழு சிங்கப்பூரர்கள் கூறுகிறார்கள்.
கொவிட்-19 கிருமி பரவுவதைத் தடுப்பதற்காக நடப்பில் இருக்கும் விதிமுறைகள் தங்களுக்குச் சலிப்பை ஏற்படுத்திவிட்டதாக 44 விழுக்காடு மக்கள் தெரிவிக்கிறார்கள்.
சண்டே டைம்ஸ் செய்தித்தாள் 1,000 சிங்கப்பூரர்களை உள்ளடக்கி ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன்மூலம் இந்த விவரங்கள் தெரியவருகின்றன.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக அரசாங்கம் பல மாத காலமாக பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது.
ஐந்து பேருக்கு மேல் சேர்ந்து எந்தவொரு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளக் கூடாது. வெளியே போகும்போது முகக்கவசத்துடன் செல்லவேண்டும் என்பவை எல்லாம் நிபந்தனைகளில் அடங்கும்.
கொவிட்-19 நிபந்தனைகள் காரணமாக ஏற்படக்கூடிய சலிப்பு இயற்கையானதுதான் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
இருந்தாலும் கிருமிப் பரவலைத் தடுக்க இவை அவசியம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
ஓரிடத்திற்குச் செல்லும்போது 'சேஃப்எண்ட்ரி' என்ற பாதுகாப்பு ஏற்பாட்டைக் கடைப்பிடிப்பது பெரும் தொல்லையாக இருக்கிறது என்று ஐந்து பேரில் ஒருவர் கூறுகிறார். நண்பர்கள், குடும்பத்தாருடன் கூடுவதற்குக் கூட வரம்பு இருப்பது மகிழ்ச்சியாக இல்லை என்று 14 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
வெளிநாடுகளுக்குச் செல்ல முடியவில்லை என்று மக்கள் கவலைப்படுகிறார்கள். அதோடு, பொது வசதிகளைப் பயன்படுத்துவதற்கும் வரம்புகள் நடப்பில் இருப்பதால் அவர்கள் சங்கடப்படுகிறார்கள்.
கொவிட்-19 விதிமுறைகள் கடுமையானவை என்றாலும் நியாயமானவைதான் என்று 10ல் நான்கு பேர் நம்புகிறார்கள்.
அளவுக்கு அதிக கட்டுப்பாடுகள் நடப்பில் இருப்பதாக 5 விழுக்காட்டினர் கருதுகிறார்கள்.
பல கட்டுப்பாடுகள் காரணமாக தங்களுக்குச் சலிப்பு ஏற்பட்டாலும் நிலவரத்தைத் தாங்கள் புரிந்துகொண்டு இருப்பதாக பெரும்பாலானவர்கள் கூறுகிறார்கள்.
முகக்கவசத்தைப் பொறுத்தவரை எப்போதுமே அவற்றை முறையாக அணிந்துகொள்வதாக 76 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
அதிகாரிகள் இல்லாவிட்டாலும் பெரும்பாலான நேரங்களில் தாங்கள் இப்படி செய்வதாக 20 விழுக்காட்டினர் கூறினர்.
சமூகப் பாதுகாப்பு இடைவெளியைப் பொறுத்தவரை இதை எப்போதுமே தாங்கள் கடைப்பிடிப்பதாக 43 விழுக்காட்டினர் கூறினர்.
அப்போதைக்கு அப்போது மட்டும் இதைக் கடைப்பிடிப்பதாக கூறியவர்கள் 10 விழுக்காட்டினர். 100 பேருக்கு 43 பேர் பெரும்பாலும் இந்த நியதியைத் தாங்கள் கடைப்பிடித்து நடப்பதாகத் தெரிவித்தனர்.
சிங்கப்பூரில் இரண்டாம் கட்ட தளர்வுகள் ஜூன் 19ஆம் தேதி நடப்புக்கு வந்தன.
அது முதல், 35 மற்றும் அதற்கும் அதிக வயதுள்ளவர்களுடன் ஒப்பிடும்போது, இளையர்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே அதிக குழுவினருடன் கலந்துறவாடி வருகிறார்கள் என்பதும் ஆய்வு மூலம் தெரிந்தது.
கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுப்பதற்காக சமூகப் பாதுகாப்பு இடைவெளியைக் கடுமையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் சிங்கப்பூரில் புதிய தொற்றுகள் குறைந்திருக்கின்றன.
இந்த நிபந்தனைகள் தொடர்ந்து நடப்பில் இருந்து வரும் என்றும் தெரிகிறது. இந்த நிலையில், கொவிட்-19 கட்டுப்பாடுகளால் மக்களுக்கு ஏற்படக்கூடிய சலிப்புகள் மிக முக்கியமான ஒன்று என்றும் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

