சிங்கப்பூரில் பொதுக் கழிவறைகளின் துப்புரவு என்பது பல ஆண்டுகளாகவே பிரச்சினையாக இருந்து வருகிறது.
அவை சுத்தமாக, துப்புரவாக இருக்கவேண்டும் என்பதற்காக 1983ல் அப்போதைய சுற்றுப்புற அமைச்சு, "பொதுக் கழிவறைகளைச் சுத்தமாக வைத்திருப்போம்," என்ற ஓர் இயக்கத்தைத் தொடங்கியது.
இருந்தாலும் விரும்பிய பலன் முழுமையாகக் கிடைக்கவில்லை. இப்போது தேசிய சுற்றுப்புற வாரியம் 'பொதுக் கழிவறை துப்புரவு முயற்சி'யை ஜூன் 18ல் தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக இந்த வாரியமும் தூய்மை, பசுமை இயக்கமும் ஒரு காணொளியை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளன.
'லூ ஜாம்' என்ற அந்தக் காணொளி, பொதுக் கழிவறைகள் சுத்தமாக இருக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அதற்கான வழிகளைச் சொல்கிறது.
நடிகையும் நகைக்சுவைக் கலைஞருமான திருவாட்டி சித்தி கஜிலா சைனல் அதில் தோன்றி, மக்களின் புரிந்துணர்வு மேம்பட உதவுகிறார்.
கழிவறையைச் சுத்தமாக வைத்திருக்க நான்கு செயல்களைச் செய்ய வேண்டும் என்று அவர் தெரிவிக்கிறார்.
தண்ணீரைத் திறந்துவிடுவது, இருக்கையைச் சுத்தப்படுத்துவது, குப்பைகளைத் தொட்டியில் போடுவது, தரை ஈரமாக இருந்தால் உலரவிடுவது ஆகியவை அந்த நான்கு காரியங்கள்.
இந்தக் காணொளி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இது நல்ல தொடக்கம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
இருந்தாலும் கழிவறைத் துப்புரவைப் பொறுத்தவரையில் மேலும் பலவற்றைச் செய்யவேண்டி இருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இதனிடையே, காப்பிக் கடைகள், உணவு அங்காடிக் கடைகளில் உள்ள கழிவறைகளுக்காக இந்த ஆண்டின் பிற்பகுதியில் கழிவறை மேம்பாட்டுச் செயல்திட்டம் ஒன்றை தேசிய சுற்றுப்புற வாரியம் தொடங்கப்போவதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்வேளையில், இந்த வாரியத்துடன் சேர்ந்து செயல்பட்டு, கழிவறை துப்புரவாளர்களுக்குப் பயிற்சியை வழங்கி வருவதாக சிங்கப்பூர் கழிவறைப் பராமரிப்புச் சங்கம் தெரிவித்துள்ளது.

